இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
ஞாயிற்றுக்கிழமைகளில் சைக்கிள் ஓட்டுதல் நிகழ்வு - புதுதில்லியில் மத்திய அமைச்சர் திரு மன்சுக் மண்டாவியா தலைமை வகித்தார்
Posted On:
22 JUN 2025 6:11PM by PIB Chennai
உடல் திறன் இந்தியா இயக்கத்தின் (ஃபிட் இந்தியா) ஒரு அங்கமான ஞாயிற்றுக்கிழமைகளில் சைக்கிள் ஓட்டுதல் நிகழ்வு இன்று (23.06.2025) புதுதில்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுகள் அமைச்சர் திரு மன்சுக் மண்டாவியா தலைமையில் தொடங்கியது. நாடு தழுவிய அளவில் யோகாசன பாரத் அமைப்புடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், நடிகையும் ஃபிட் இந்தியா தூதருமான மியா மேல்சர், முன்னாள் இந்திய மகளிர் ஹாக்கி கேப்டன் ராணி ராம்பால், டேக்வாண்டோ சாம்பியன் ரோடாலி பருவா, ஃபிட் இந்தியா ஆர்வலர் நடிகை மதுரிமா துலி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
நேற்று (ஜூன் 21) கொண்டாடப்பட்ட சர்வதேச யோகா தினத்தின் ஒரு பகுதியாக இந்த சைக்கிள் ஓட்டுதல் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வின்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, இந்த ஞாயிற்றுக்கிழமையில் சைக்கிள் ஓட்டுதல் நிகழ்வு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று என்றார். நேற்று, நாடு முழுவதும் யோகா நிகழ்வுகள் நடத்தப்பட்டதை அவர் குறிப்பிட்டார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால், ஃபிட் இந்தியா ஒரு மக்கள் இயக்கமாக மாறியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மிதிவண்டியில் நாம் அழுத்தும்போது, இந்தியாவை ஒரு உடற்பயிற்சி சக்தியாக மாற்றுகிறோம் என அவர் கூறினார். நேற்று யோகாவும், இன்று சைக்கிள் ஓட்டுதலும் நாளை (ஜூன் 23) ஒலிம்பிக் தினமும் உடற்பயிற்சி புரட்சியை ஏற்படுத்துவதாகவும் இவை ஒவ்வொரு இந்தியரையும் இணைக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மகாராஷ்டிராவின் பந்தர்பூரில் நடந்த ஃபிட் இந்தியா ஞாயிற்றுக் கிழமைகளில் சைக்கிள் ஓட்டுதல் நிகழ்வில் 5000 பேர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுகள் இணையமைச்சர் திருமதி ரக்ஷா காட்சே கலந்து கொண்டார்.
டிசம்பர் 2024-ல் தொடங்கப்பட்ட ‘ஃபிட் இந்தியா ஞாயிற்றுக் கிழமைகளில் சைக்கிள் ஓட்டுதல் இயக்கம் நாடு முழுவதும் 10,500 க்கும் மேற்பட்ட இடங்களில் இதுவரை 3.75 லட்சத்திற்கும் மேற்பட்ட தனிநபர்களின் பங்கேற்புடன் நடைபெற்றுள்ளது. இந்த மிதிவண்டி ஓட்டுதல் பயணங்கள் நாடு முழுவதும் உள்ள பல கேலோ இந்தியா மையங்கள், கேலோ இந்தியா மாநில சிறப்பு மையங்கள், இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையங்கள், கேலோ இந்தியா அங்கீகாரம் பெற்ற அகாடமிகள், பிராந்திய மையங்கள், பல்வேறு தேசிய சிறப்பு மையங்கள் போன்றவற்றால் நடத்தப்படுகின்றன.
****
(Release ID: 2138725)
AD/TS/PLM/RJ
(Release ID: 2138739)