பாதுகாப்பு அமைச்சகம்
பத்மஸ்ரீ விருது பெற்ற திரு உமாசங்கர் பாண்டே பாதுகாப்புத் துறையின் சொத்து நிர்வாக தலைமை இயக்குநரக வளாகத்தில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில் கலந்து கொண்டார்
Posted On:
05 JUN 2025 5:33PM by PIB Chennai
பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான திரு உமாசங்கர் பாண்டே 2025 ஜூன் 05 அன்று புதுதில்லியில் உள்ள பாதுகாப்புத் துறையின் நிலச் சொத்து நிர்வாக தலைமை இயக்குநரக வளாகத்தில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழாவில் கலந்து கொண்டார். இந்த விழா மரம் நடும் நிகழ்வுடன் தொடங்கியது. இதில் பாதுகாப்பு நிலச் சொத்து நிர்வாக அமைப்பில் பணியாற்றி வரும் அதிகாரிகள் அவர்களது குழந்தைகள் துறை சார்ந்த பிற பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் தொடர்பான விவாதங்கள், கண்காட்சிகள் மற்றும் விழிப்புணர்வு பேரணி ஆகியவை இடம் பெற்றன.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு உமாசங்கர் பாண்டே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசின் பொறுப்பு மட்டுமின்றி, அனைத்து குடிமக்களின் கூட்டுக் கடமையாகும் என்று குறிப்பிட்டார். நீர் பாதுகாப்பு, மரம் நடுதல் போன்ற முயற்சிகள் புவியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உதவிடும் என்று கூறினார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். தேசிய நீர் பல்கலைக்கழகத்தை நிறுவ வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். மேலும் இதற்கான திட்டத்தை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார். நாடு முழுவதும் நீரின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளும் வகையில் நூலகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படுவதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத் துறை நிலச் சொத்து நிர்வாக தலைமை இயக்குநர் திரு எஸ்.என். குப்தா, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து மீண்டும் வலியுறுத்தினார். பசுமை மண்டல மேம்பாடு, மழைநீர் சேகரிப்பு, கழிவு நீர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு புதுமையான முயற்சிகளையும் அப்போது அவர் பட்டியலிட்டார்.
பிரதமரின் தூய்மையான, பசுமையான இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப தாயின் பெயரில் மரக்கன்று நடும் திட்டத்தின் கீழ் கன்டோன்மென்ட் வாரியங்களால் 6.40 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாகக் கூறினார். நீர் பாதுகாப்பு தொடர்பான பிரச்சாரத்தில் தேசிய அளவில் பாதுகாப்பு நிலச் சொத்து நிர்வாக இயக்குநரகம் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளதாக அவர் கூறினார். இது நிலத்தடி நீர் பாதுகாப்பில் அதன் முயற்சிகளுக்கு ஒரு சான்றாகும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2134229
-----
AD/TS/SV/KPG/DL
(Release ID: 2134315)
Visitor Counter : 2