விவசாயத்துறை அமைச்சகம்
நாடு முழுவதும் 9 தூய்மை தாவரத் திட்டங்கள் தொடங்கப்படும்: மத்திய வேளாண், விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான்
Posted On:
03 JUN 2025 5:53PM by PIB Chennai
மகாராஷ்டிர முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் மத்திய வேளாண், விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் ஆகியோர் புனேயில் நடைபெற்ற நாட்டின் முதலாவது சர்வதேச வேளாண் ஹேக்கத்தானின் நிறைவு அமர்வில் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய திரு தேவேந்திர ஃபட்னாவிஸ், தற்போதைய பருவநிலை மாற்றத்தின் பின்னணியில் வேளாண்துறை பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கிறது என்றும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதுதான் அதற்கு ஒரே தீர்வு என்றும் வலியுறுத்தினார். புனே வேளாண் ஹேக்கத்தானில் இருந்து பயனுள்ள தொழில்நுட்பங்களைக் கொண்டு, அவற்றை நேரடியாக விவசாயிகளிடம் கொண்டு செல்ல வேண்டியதன் அவசியத்தையும் அவர் வெளிப்படுத்தினார். வேளாண் தொழில்நுட்பத் துறையில் இந்தப் புரட்சியை முன்னெடுத்துச் சென்றால், அது வேளாண் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய திரு சிவ்ராஜ் சிங் சௌகான், பங்கேற்பாளர்களால் வெளிப்படுத்தப்பட்ட புதுமைக் கண்டுபிடிப்புகள் மற்றும் அவர்களுடைய உற்சாகத்தைப் பாராட்டினார். மேலும் தோட்டக்கலை சிறப்பிற்கு மகாராஷ்டிராவின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைப் பாராட்டினார்.
"மகாராஷ்டிரா, நாட்டின் தோட்டக்கலை மையமாக உருவெடுத்துள்ளது என்றும் அரசின் ஒருங்கிணைந்த முயற்சிகளும் அதன் விவசாயிகளின் கடின உழைப்பும் நாட்டின் பிற பகுதிகளுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளன என்றும் அவர் கூறினார். திராட்சை, மாதுளை, ஆரஞ்சு, கொண்டைக்கடலை மற்றும் பல்வேறு காய்கறிகளின் சாதனை உற்பத்திக்காக மகாராஷ்டிரா மாநிலத்தை பாராட்டுவதாக அவர் தெரிவித்தார்.
தோட்டக்கலைத் துறையில் சாகுபடிக்குக் கிடைக்கும் தாவரங்கள் நோயற்றவை மற்றும் உற்பத்தித் திறன் கொண்டவையா இல்லையா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று கூறிய அவர், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க, மத்திய அரசு 'தூய்மைத் தாவரத்' திட்டத்தைத் தொடங்கும் என்று தெரிவித்தார். விவசாயிகளுக்குக் கிடைக்கும் தாவரங்கள் நோயற்றவை என்பதை இந்தத் திட்டம் உறுதி செய்யும் என்று அவர் கூறினார். நாடு முழுவதும் 9 'தூய்மைத் தாவரத்' திட்டங்கள் தொடங்கப்படும், அவற்றில் 3 திட்டங்கள் மகாராஷ்டிராவில் ரூ.300 கோடி செலவில் அமைக்கப்படும் என்றும் திரு சௌகான் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2133591
***
AD/IR/KPG/DL
(Release ID: 2133616)