விவசாயத்துறை அமைச்சகம்
வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்கத்தின் 6-வது நாள் – புனே அருகே விவசாயிகளுடன் கலந்துரையாடினார் மத்திய வேளாண்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான்
வேளாண் விஞ்ஞானிகள் விவசாயிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களை வழிநடத்த வேண்டும் – திரு சிவராஜ் சிங் சௌகான்
Posted On:
03 JUN 2025 3:45PM by PIB Chennai
மத்திய வேளாண்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், மகாராஷ்டிராவின் புனே அருகே நாராயண்கோன் பகுதியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் (KVK) விவசாயிகளுடன் இன்று (03.06.2025) கலந்துரையாடினார். முன்னதாக, மத்திய அமைச்சர் நாராயண்கோன் வேளாண் விளைபொருள் சந்தைக் குழு, தக்காளி சந்தை, உள்ளூர் பண்ணை வயல்கள், குளிர்பதன கிடங்கு ஆகியவற்றை வேளாண் விஞ்ஞானிகளுடன் இணைந்து அவர் பார்வையிட்டார். அங்கு அவர் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
இந்த நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் திரு சௌகான், வேளாண் விஞ்ஞானிகள் வயல்களுக்குச் சென்று விவசாயிகளுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்கத்தின் நோக்கங்களை எடுத்துரைத்த அவர், விவசாயத் துறையில் வளர்ச்சியும், விவசாயிகளின் செழிப்பும் இல்லாமல் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க முடியாது என்று கூறினார். எனவே, விவசாயத் துறையை மேம்படுத்த வேண்டும் எனவும் நாட்டில் நாட்டில் உள்ள வேளாண் விஞ்ஞானிகள் இந்தத் துறையின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுவதாகவும் அமைச்சர் கூறினார். விஞ்ஞானிகளும் விவசாயிகளும் இந்தத் துறையின் நன்மைக்காக இணைந்து செயலாற்ற வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
பூச்சிக்கொல்லிகள், உரங்களின் சரியான, சீரான பயன்பாடு அவசியம் என்று அவர் கூறினார். தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற பயிர்களுக்கான புதிய சந்தை தலையீட்டுத் திட்டம் குறித்தும் அமைச்சர் எடுத்துரைத்தார். விவசாயிகளுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதற்கும், சந்தையில் நுகர்வோருக்கு நியாயமான விலையில் இவை கிடைப்பதற்கும் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
பருவநிலை மாற்றம் விவசாயத் துறைக்கு கவலை அளிப்பதாக கூறிய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், இதை எதிர்கொண்டு இத்துறையை முன்னேற்ற சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் செயலாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா மாநில அரசின் வேளாண் அமைச்சர் திரு மாணிக்ராவ் கோகட்டே, வேளாண் அறிவியல் மையத்தின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
***
(Release ID: 2133527)
AD/SM/PLM/AG/KR
(Release ID: 2133552)
Visitor Counter : 2