ஊரக வளர்ச்சி அமைச்சகம்
ஜூன் 2 முதல் ஐந்து தேசிய உயர் திறன் சிறப்பு மையங்களில் நக்ஷா திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடங்கப்படுகிறது
प्रविष्टि तिथि:
01 JUN 2025 12:34PM by PIB Chennai
மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் நில வளத் துறையானது நக்ஷா (NAKSHA) எனப்படும் தேசிய புவி அறிவு சார்ந்த நகர்ப்புற வாழ்விடங்களின் ஆய்வுத் திட்டத்தைச் செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட திறன் மேம்பாட்டுப் பயிற்சிப் பணியை நாளைமுதல் (ஜூன் 2, 2025) நாட்டில் உள்ள ஐந்து உயர் திறன் சிறப்பு மையங்களில் நடத்த உள்ளது. நக்ஷா திட்டத்தில் பங்கேற்கும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 160 முதன்மை பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டம் மே 2025-ல் நிறைவடைந்தது.
இதையடுத்து இரண்டாம் கட்டப் பயிற்சித் திட்டத்தை நாளை (ஜூன் 2, 2025) காலை 10:00 மணிக்கு நில வளத் துறை செயலாளர் திரு மனோஜ் ஜோஷி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். இந்தப் பயிற்சித் திட்டத்தின் கீழ், 157 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலிருந்து 304 அதிகாரிகள் பயிற்சி பெறவுள்ளனர். நவீன புவிசார் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பயனுள்ள நகர்ப்புற சொத்து ஆய்வுகளை மேற்கொள்வது தொடர்பாக இந்த அதிகாரிகள் நேரடிப் பயிற்சி பெறுவார்கள்.
இந்தப் பயிற்சி ஜூன் 2, 2025 முதல் பின்வரும் சிறப்பு மையங்களில் ஒரு வாரத்திற்கு நடத்தப்படும்:
01) லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமி - முசோரி, உத்தரகண்ட்
02) யஷ்வந்த்ராவ் சவான் மேம்பாட்டு நிர்வாக அகாடமி - புனே, மகாராஷ்டிரா
03) வடகிழக்கு பிராந்திய சிறப்பு மையம் - குவஹாத்தி, அசாம்
04) மகாத்மா காந்தி மாநில பொது நிர்வாக நிறுவனம் - சண்டிகர், பஞ்சாப்
05) நிர்வாகப் பயிற்சி நிறுவனம் - மைசூர், கர்நாடகா
நக்ஷா திட்டம் (NAKSHA) பற்றி:
இந்தியாவின் நகர்ப்புற மக்கள் தொகை 2031-ம் ஆண்டுக்குள் 600 மில்லியனைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால், நவீன நிலப் பதிவுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. நக்ஷா திட்டம் இந்த சவாலை தொழில்நுட்பம் சார்ந்த சிறந்த அணுகுமுறையுடன் எதிர்கொள்கிறது. நக்ஷா திட்டமானது மத்திய அரசின் நில வளத் துறை, இந்திய நில அளவைத் துறை, தேசிய தகவல் சேவை மையம் மற்றும் ஐந்து உயர் திறன் சிறப்பு மையங்களுடன் இணைந்து ஒரு முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. நக்ஷா திட்டம் 27 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் உள்ள 157 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தொடங்கப்பட்டுள்ளது.
******
(Release ID: 2133099)
AD/TS/PLM/RJ
(रिलीज़ आईडी: 2133125)
आगंतुक पटल : 29