மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
திரிபுராவை மீன் உபரி மாநிலமாக மேம்படுத்த வேண்டும் - மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் வலியுறுத்தல்
திரிபுராவில் 42.4 கோடி ரூபாய் ஒருங்கிணைந்த நீர் பூங்காவிற்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
Posted On:
18 MAY 2025 4:37PM by PIB Chennai
திரிபுராவின் கைலாஷஹரில் 42.4 ரூபாய் கோடி மதிப்பிலான ஒருங்கிணைந்த நீர் பூங்காவிற்கு மத்திய மீன்வளத் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், இன்று (18.05.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியின்போது மாநிலத்தின் வளமான கலாச்சாரத்தையும் பலவகையான மீன்களை எடுத்துக்காட்டும் கண்காட்சி அடங்கிய மீன் விழாவின் தொடக்க நிகழ்வும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய மீன்வளத்துறை இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியன், திரிபுரா மீன்வளத்துறை அமைச்சர் திரு சுதாங்ஷு தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமது உரையில், மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங், இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் இந்தத் துறை வகிக்கும் முக்கிய பங்கை எடுத்துரைத்தார். 2014-15-ம் ஆண்டு முதல் மீன்வளத் துறை 9.08% வளர்ச்சியைக் கண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் வேளாண் தொடர்புடைய துறைகளில் இதுவே மிக உயர்ந்த வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் அவர் கூறினார். மீன்வளத் துறையில் திரிபுராவின் பரந்த ஆற்றலை குறிப்பிட்ட அவர், நவீன தொழில்நுட்பம், ஒருங்கிணைந்த செயல்முறைகள், புதுமைகளை புகுத்துதல் ஆகியவற்றின் மூலம் தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். நாட்டில் உள்ள 11 ஒருங்கிணைந்த நீர் பூங்காக்களில் 4 வடகிழக்கு பிராந்தியத்தில் அமைக்கப்பட்டுள்ளன எனவும் இதில் திரிபுராவில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள இந்த பூங்காவும் அடங்கும் எனவும் அவர் கூறினார். திரிபுராவை மீன் ஏற்றுமதி செய்யும் திறன் கொண்ட "மீன் உபரி மாநிலமாக" மாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பின் விடாமுயற்சியுடன் பாடுபட வேண்டும் என்றும், மாநிலத்தின் தேவையான 1.5 லட்சம் டன்களை விட அதிகமாக 2 லட்சம் டன் உற்பத்தி இலக்கை அடைய பாடுபட வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் வலியுறுத்தினார். சிக்கிம் போன்றே விரைவில் திரிபுராவும் ஒரு இயற்கை மீன் குழுமமாக உருவாக்கப்படும் என்று அவர் கூறினார். ஒருங்கிணைந்த நீர் பூங்கா பணிகளை காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய மத்திய அமைச்சர், மீன் விவசாயிகளுக்கு நிறுவனப் பயிற்சி அளிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மீன்வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம், பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் போன்ற அரசுத் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மீனவர்களை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங், கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில், பல்வேறு பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் அரசுத் திட்ட பலன்களின் அனுமதி உத்தரவுகளை அமைச்சர் வழங்கினார்.
மீன்வளத் துறை இணையமைச்சர் திரு. ஜார்ஜ் குரியன் பேசுகையில், திரிபுராவில் மீன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மாநிலத்தின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 98% பேர் மீன்களை உட்கொள்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார். மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பிலும் பொருளாதாரத்திலும் மீன்வளம் வகிக்கும் குறிப்பிடத்தக்க பங்கை அவர் எடுத்துரைத்தார்.
திரிபுரா அரசின் மீன்வளத்துறை அமைச்சர் திரு சுதாங்ஷு தாஸ், இலக்கு முறையிலான திட்டங்கள் மூலம் மீனவர்கள் மற்றும் மீன் விவசாயிகளை மேம்படுத்துவதற்கான மாநிலத்தின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார்.
மத்திய மீன்வளத்துறைச் செயலாளர் டாக்டர் அபிலக்ஷ் லிக்கி பேசுகையில், இத்துறையின் முக்கிய திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை எடுத்துரைத்தார். இவற்றின் ஒருங்கிணைந்த முதலீட்டுத் தொகை சுமார் ₹38,000 கோடி என அவர் கூறினார். வடகிழக்கு பிராந்தியத்திற்கு ₹2,114 கோடி மதிப்புள்ள திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன எனவும் இதில் குறிப்பாக திரிபுராவிற்கு ₹319 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், மீன்வளத் துறையின் இணைச் செயலாளர் திரு சாகர் மெஹ்ரா, மத்திய, மாநில அரசுகளின் மீன்வளத் துறை மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
*****
(Release ID: 2129445
TS/PLM/SG
(Release ID: 2129472)