விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குவஹாத்தியில் காணொலி வாயிலாக நடைபெற்ற பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 55,000 வீடுகளுக்கான புதுமனை புகும் விழாவில் மத்திய அமைச்சர் திரு. சிவராஜ் சிங் சௌஹான் கலந்து கொண்டார்

Posted On: 17 MAY 2025 5:15PM by PIB Chennai

அசாம் மாநிலத்தில் கிராமப்புற வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, மத்திய வேளாண் அமைச்சர் திரு. சிவராஜ் சிங் சௌஹான், குவஹாத்தியில் காணொலி வாயிலாக இன்று நடைபெற்ற பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 55,000 வீடுகளுக்கான புதுமனைபுகும் விழாவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்தின் கீழ் கூடுதலாக, 3.76 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக திரு. சிவராஜ் சிங் சௌஹான் அறிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு. சிவராஜ் சிங் சௌஹான், கிராமப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், பின்தங்கிய மற்றும்  விளிம்பு நிலையில் உள்ள சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளில் மத்திய அரசின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 20 லட்சம் வீடுகள் கட்டி முடித்து குறிப்பிடத்தக்க சாதனையை அசாம் மாநிலம் படைத்துள்ளதாக மத்திய அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, புதிய வீடுகளை வெற்றிகரமாகக் கட்டி முடித்து புதிய வீடுகளுக்கு குடிபெயர்ந்த இத்திட்டப் பயனாளிகளுக்கு அமைச்சர் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

கிராமப்புற பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான  நடவடிக்கையாக, வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கும், பெண்களுக்கு அத்தியாவசியத் திறன் மேம்பாட்டை வழங்கும் வகையில் பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் லக்கிமி மிஸ்திரி என்ற கட்டுமானப் பணிகளில் பெண்களின் திறன் மேம்பாட்டிற்கான திட்ட முயற்சியையும் திரு. சிவராஜ் சிங் சௌஹான் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தை நினைவுகூரும் வகையில், லக்கிமி மிஸ்திரி முன்முயற்சியின் கீழ் பயிற்சி பெறும் ஐந்து பெண்களுக்கு பாதுகாப்புச் சாதனங்கள் வழங்கப்பட்டன.

இந்த சூழலில், கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தின் கீழ் அசாம் மாநிலம் முழுவதும் 21 அறிவுசார் மையங்களை திரு. சிவராஜ் சிங் சௌஹான் காணொலி மூலம் திறந்து வைத்தார். கிராமப்புற விவசாய உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையிலும், வளங்கள் மற்றும் தகவல்களை சரியான நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்தல் என்ற நோக்கத்துடன் இந்த மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

அசாம் மாநில அரசின் முயற்சிகளுக்கு திரு. சிவராஜ் சிங் சௌஹான் பாராட்டு தெரிவித்தார். மேலும் கிராமப்புற வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதில் முன்னணி மாநிலமாக உருவெடுக்கச் செய்ததற்காக அம்மாநில முதலமைச்சர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை அவர் பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அம்மாநில முதலமைச்சர் டாக்டர் ஹிமந்த பிஸ்வா சர்மா, மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். விவசாயம் மற்றும் கிராமப்புற வாழ்வாதாரங்களில் நிலையான வளர்ச்சி மூலம் விவசாயிகள், பெண்கள் மற்றும் கிராமப்புற சமூகங்களை மேம்படுத்துவதில் அசாம் மாநில அரசின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

அசாம் மாநில வேளாண் அமைச்சர் திரு. அதுல் போரா, பஞ்சாயத்து மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ரஞ்சித் குமார் தாஸ் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2129336

***

TS/SV/DL


(Release ID: 2129348)
Read this release in: English , Urdu , Hindi , Assamese