சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தில்லி-சஹரன்பூர்-டேராடூன் இடையேயான 210 கி.மீ தொலைவிலான விரைவுச் சாலையை மத்திய இணையமைச்சர் திரு. ஹர்ஷ் மல்ஹோத்ரா ஆய்வு செய்தார்

Posted On: 17 MAY 2025 4:04PM by PIB Chennai

மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் இணையமைச்சர் திரு. ஹர்ஷ் மல்ஹோத்ரா, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரிகளுடன் இணைந்து தில்லி-சஹரன்பூர்-டேராடூன் இடையே அமைக்கப்பட்டுள்ள 210 கி.மீ நீளமுள்ள விரைவுச் சாலையை  இன்று ஆய்வு செய்தார்.

தில்லி-டேராடூன் இடையே அமைக்கப்பட்டு வரும் விரைவுச் சாலையின் முன்னேற்றம் குறித்து திருப்தி தெரிவித்த திரு. ஹர்ஷ் மல்ஹோத்ரா, தலைநகர் தில்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதிலும், தில்லி-மீரட் இடையே அமைக்கப்பட்டு வரும் விரைவுச் சாலை மற்றும் பிற இணைப்புச் சாலைகள் உள்ளிட்ட நெடுஞ்சாலைகளின் சுமையைக் குறைப்பதிலும் இந்த விரைவுச் சாலை முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறினார். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்த பல்வேறு இடையூறுகள் குறித்த விபரங்களைக் கவனத்தில் கொண்டு, திட்டத்தை விரைந்து செயல்படுத்தி, குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவுசெய்யுமாறு அமைச்சர் உத்தரவிட்டார். இதனால் திட்டத்தின் எஞ்சியுள்ள பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் இரண்டு முதல் மூன்று மாத காலத்திற்குள் நிறைவடையும் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள்  அமைச்சரிடம் தெரிவித்தனர்.

தில்லியின் அக்ஷர்தாம் கோயிலில் இருந்து தொடங்கும் தில்லி-டேராடூன் விரைவுச்சாலை, பாக்பத், பராத், முசாபர்நகர், ஷாம்லி மற்றும் சஹாரன்பூர் (உத்தரப்பிரதேசம்) வழியாகச் சென்று டேராடூனில் முடிவடையும்.

இந்த விரைவுச்சாலை தோராயமாக ரூ.12000 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையில் வாகனங்கள் மணிக்கு 100 கிமீ வேகத்தில் செல்ல முடியும். மேலும், தில்லியில் இருந்து டேராடூன் வரையிலான பயண நேரம் தற்போதைய 6.5 மணி நேரத்திலிருந்து 2.5 மணி நேரமாகக் குறையும். இந்த விரைவுச்சாலை, ஹரித்வார் நகரை நோக்கி ஒரு விரைவுச்சாலையைக் கொண்டிருப்பதுடன், மேலும், சார்-தாம் நெடுஞ்சாலையுடன் இணைக்கப்படும். இதனால் உத்தரகண்ட் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களின் மலைப் பிரதேசங்கள் மற்றும் புனிதத் தலங்களுக்கான போக்குவரத்து இணைப்பு அதிகரிக்கும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான சான்றாக, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்த விரைவுச் சாலையின் ஒரு அங்கமாக, ராஜாஜி தேசிய பூங்காவில் 12 கி.மீ நீளமுள்ள ஆசியாவின் மிகப்பெரிய உயர் வழித்தடத்தையும் உருவாக்கியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2129319

 

***

TS/SV/DL


(Release ID: 2129337)
Read this release in: Hindi , English , Urdu