விவசாயத்துறை அமைச்சகம்
மகாராஷ்டிராவின் நாக்பூரில் நாளை வளர்ச்சி அடைந்த மேம்பட்ட வேளாண்மை (விக்சித் கிருஷி) குறித்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் தலைமை வகிக்கிறார - மகாராஷ்டிராவில் செயல்படுத்தப்படும் வேளாண் திட்டங்களையும் ஆய்வு செய்யவுள்ளார்
Posted On:
17 MAY 2025 3:14PM by PIB Chennai
மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன்கள் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், மகாராஷ்டிராவின் நாக்பூரில் 'விக்சித் கிருஷி' எனப்படும் 'மேம்பட்ட வேளாண் நடைமுறைகள் தொடர்பான உறுதிப்பாட்டு இயக்கம்' குறித்த உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்திற்கு நாளை (2025 மே 18) தலைமை வகிக்கவுள்ளார். மகாராஷ்டிராவில் செயல்படுத்தப்படும் முக்கிய விவசாய, கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களையும் அவர் ஆய்வு செய்யவுள்ளார். மகாராஷ்டிர முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது மத்திய அமைச்சர் திரு சௌகான், தேசிய மண் வகைகள் நூலகத்தை (NSSL) திறந்து வைக்கவுள்ளார். இது டிஜிட்டல் விவசாயத்தில் ஒரு முன்னோடி முயற்சியாகும். இது நாக்பூரில் உள்ள தேசிய மண் ஆய்வு - நில பயன்பாட்டு திட்டமிடல் நிறுவனம், போபாலில் உள்ள இந்திய மண் அறிவியல் நிறுவனம், புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றால் இணைந்து உருவாக்கப்பட்டதாகும். இந்த முயற்சி துல்லிய வேளாண்மைக்கான திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
நாக்பூரில் உள்ள ஐசிஏஆர்-மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட புதிய தொழில்நுட்பத்தையும் அமைச்சர் அறிமுகம் செய்யவுள்ளார். இந்தத் தொழில்நுட்பம் பருத்தியில், துல்லியமான பூச்சி கட்டுப்பாட்டிற்கான மேம்பட்ட இயந்திர கற்றல் வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது. இந்தப் பகுதியைச் சேர்ந்த சிறந்த விவசாயிகள் இந்நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டு கௌரவிக்கப்படுவார்கள்.
டிஜிட்டல் விவசாயத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் தேசிய மண் வகை நூலகத்தை நிறுவுவது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைகிறது. இந்த நூலகமானது வழக்கமான ஈர வேதியியல் அடிப்படையிலான சோதனைக்கு பதிலாக, விரைவான, செலவு குறைந்த மண் பகுப்பாய்வு முறையை எளிதாக்கும். இந்தியாவின் பல்வேறு வேளாண்-பருவநிலை மண்டலங்களைக் குறிக்கும் மண் வகைத் தரவுகளை மத்திய அமைச்சர் முறையாக நாட்டிற்கு அர்ப்பணிப்பார்.
அமைச்சர் திரு சௌகானுடன் ஐசிஏஆர் தலைமை இயக்குநர், துணைத் தலைமை இயக்குநர்கள், மகாராஷ்டிராவில் உள்ள ஐசிஏஆர் நிறுவனங்களின் இயக்குநர்கள், மாநில வேளாண் பல்கலைக்கழகங்களின், துணைவேந்தர்கள், வேளாண் துறை சார்ந்த பிற முக்கியப் பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.
***
TS/PLM/DL
(Release ID: 2129321)