கனரகத் தொழில்கள் அமைச்சகம்
கர்நாடக அரசு பிரதமரின் மின்சார வாகன இயக்கத் திட்டத்தின் கீழ் மின்சார பேருந்துகளை ஒதுக்க கோருகிறது
Posted On:
16 MAY 2025 1:43PM by PIB Chennai
மத்திய நிதியுதவியுடன் கூடிய மின்சார வாகன இயக்கத் (பிஎம் இ –டிரைவ்) திட்டத்தின் கீழ் மின்சாரப் பேருந்துகளை ஒதுக்கக் கோரி கர்நாடக அரசிடமிருந்து கனரக தொழில்துறை அமைச்சகம் ஒரு முறையான முன்மொழிவைப் பெற்றுள்ளது. முக்கிய நகரங்களில் மேம்பட்ட நகர்ப்புற பொது போக்குவரத்து அமைப்புகளின் அவசியத்தை மேற்கோள் காட்டி கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ராமலிங்க ரெட்டி மாநிலத்தின் கோரிக்கையைச் சமர்ப்பித்தார்.
இதற்குச் சாதகமாக பதிலளித்த மத்திய கனரக தொழில்துறை மற்றும் எஃகு துறை அமைச்சர் திரு எச்.டி. குமாரசாமி, அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, கர்நாடக அரசுக்கு மத்திய அரசின் முழுமையான ஆதரவை உறுதி செய்தார். ஒதுக்கீடு செயல்முறை ஏற்கனவே நடந்து வருவதாகவும், கர்நாடகா படிப்படியாகவும் முன்னுரிமையுடனும் மின்சார பேருந்துகளைப் பெறும் என்றும் மத்திய அமைச்சர் உறுதிப்படுத்தினார்.
“மத்திய அரசிடமிருந்து கர்நாடகாவுக்கு அனைத்து ஆதரவையும் பெறுவதை நான் உறுதி செய்வேன்,” என்று திரு எச்.டி. குமாரசாமி கூறினார். “பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், இந்தியா முழுவதும் பொதுப் போக்குவரத்து இயக்கத்தை நாங்கள் மாற்றி வருகிறோம். பிஎம் இ –டிரைவ் திட்டத்தின் கீழ் கர்நாடகா நிச்சயமாக பேருந்துகளைப் பெறும்” என்று அவர் தெரிவித்தார்.
பிஎம் இ –டிரைவ் திட்டத்தின் கீழ் ஒன்பது முக்கிய நகரங்களுக்கு 14,000 மின்சாரப் பேருந்துகள் ஒதுக்கப்பட உள்ளன. மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான கலந்துரையாடல்கள், சார்ஜிங் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் வாகன பராமரிப்பு அமைப்புகள் உள்ளிட்ட தொடர்புடைய உள்கட்டமைப்புகளையும் உள்ளடக்கியுள்ளன. அடையாளம் காணப்பட்ட நகர்ப்புறக் குழுக்களில் விரைவாக செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கான செயல்படுத்தல் மாதிரிகளை இரு தரப்பு அதிகாரிகளும் ஆராய்ந்தனர்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் தொடங்கப்பட்ட பிஎம் இ –டிரைவ் முன்முயற்சி, 14,028 மின்சார பேருந்துகளுடன் நகரப் பேருந்து செயல்பாடுகளை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு 01.04.2024 முதல் 31.03.2026 வரையிலான இரண்டு ஆண்டுகளில் ரூ 10,900 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து மாநில அரசுகள் மற்றும் பங்குதாரர்களுடன் இணைந்து இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் பணியை நிறைவேற்ற கனரகத் தொழில்துறை அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது.
***
(Release ID: 2129050)
SM/PKV/RR/SG
(Release ID: 2129136)