விவசாயத்துறை அமைச்சகம்
நாகாலாந்தில் உள்ள ஜலுகியில் கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு கல்லூரியின் புதிய கட்டிடங்களை மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் திறந்து வைத்தார்
Posted On:
15 MAY 2025 7:32PM by PIB Chennai
நாகாலாந்தின் ஜலுகியில் உள்ள மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தின் (இம்பால்) கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு கல்லூரியின் நிர்வாக மற்றும் கல்விப் பிரிவை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக மேம்பாட்டு அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் திறந்து வைத்தார். நாகாலாந்து துணை முதல்வர் திரு டி.ஆர். ஜெலியாங், மாநில ஊரக மேம்பாட்டு அமைச்சர் திரு மெட்சுபோ ஜமீர், மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தின் (இம்பால்) துணைவேந்தர் டாக்டர் அனுபம் மிஸ்ரா ஆகியோர் முன்னிலையில் இந்த வளாகம் திறந்து வைக்கப்பட்டது.
தனது துவக்க உரையில், நாகாலாந்தின் விவசாயம் மற்றும் கால்நடைத் துறைகளின் முன்னேற்றத்தை திரு சவுகான் எடுத்துரைத்தார். வேளாண் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக நாகாலாந்து மாநிலத்திற்கு ரூ.338.83 கோடி நிதி உதவியை அவர் அறிவித்துள்ளார். மாநிலத்தின் விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கான செயல் திட்டத்தை வகுக்குமாறு நாகாலாந்து அரசைக் கேட்டுக் கொண்டதுடன், மேலும் இந்த விஷயத்தில் மத்திய அரசின் முழு ஆதரவையும் உறுதி செய்துள்ளார்.
நாகாலாந்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் விஞ்ஞானிகள், வேளாண் அறிவியல் நிலைய அதிகாரிகள், பல்கலைக்கழக வல்லுநர்கள் மற்றும் பிரபலங்கள் அடங்கிய ஒரு முக்கிய அறிவியல் குழுவை அமைத்து, கிராமங்களில் உள்ள விவசாயிகளுடன் மாதத்திற்கு இரண்டு முறையாவது அவர்களின் பிரச்சினைகளைக் கண்டறியுமாறு திரு சிவராஜ் சிங் சவுகான் மாநில அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு கல்லூரியின் முயற்சிகளை மத்திய அமைச்சர் பாராட்டினார். மாணவர்களின் புத்தொழில் /தொழில்முனைவு மேம்பாட்டிற்கு அனைத்து ஒத்துழைப்பும், நிதி உதவியும் வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். இந்த நிகழ்வில் அமைக்கப்பட்டிருந்த விவசாயிகளின் கண்காட்சியையும் அரங்குகளையும் அமைச்சர் பார்வையிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
விழாவிற்குத் தலைமை தாங்கிய நாகாலாந்து ஆளுநர் திரு இல. கணேசன், இம்பால் மத்திய வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியின் பங்களிப்பைப் பாராட்டினார். 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த பாரதம் என்ற கனவை நனவாக்கும் வகையில், இந்தியாவின் வளர்ச்சிக்கு விவசாயிகள் மற்றும் நிர்வாகிகளின் அறிவியல் அணுகுமுறை மற்றும் கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2128918
***
SM/RB/DL
(Release ID: 2128958)