சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இரும்பு அல்லாத உலோக மறுசுழற்சி சூழல்சார் அமைப்பை வலுப்படுத்துவது தொடர்பான இணையதளம்: மத்திய அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி தொடங்கி வைத்தார்

Posted On: 07 MAY 2025 5:56PM by PIB Chennai

மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி இன்று (07.05.2025) இரும்பு அல்லாத உலோக மறுசுழற்சி சூழல்சார் அமைப்பு தொடர்பான இணையதளம் மற்றும் பங்குதாரர்கள் போர்ட்டல் https://nfmrecycling.jnarddc.gov.in என்பதைத்  தொடங்கி வைத்தார். நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே, சுரங்க அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த முயற்சி இந்தியாவில் ஒரு கட்டமைக்கப்பட்ட, வெளிப்படையான, நிலையான மறுசுழற்சி சூழல் அமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தேசிய இரும்பு அல்லாத உலோகக் கழிவுகள் மறுசுழற்சி கட்டமைப்பை செயல்படுத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த இணைய தளம், முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைக்கவும் தரவுகளை வெளிப்படுத்துவதை மேம்படுத்தவும் அலுமினியம், தாமிரம், ஈயம், துத்தநாகம் உள்ளிட்ட முக்கியமான உலோகங்களை மறுசுழற்சி செய்வதில் ஆதார அடிப்படையிலான கொள்கை வகுப்பை வலுப்படுத்தும் நோக்கிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி, இந்தியா தனது வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்தும் ஒரு சுழற்சி பொருளாதாரத்தை உருவாக்க உறுதிபூண்டுள்ளது என்றார். இந்த இணையதளம் மறுசுழற்சி தொடர்பான வழிகாட்டுதலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இந்த துறை சார்ந்த அனைத்து தரப்பினரும் தகவலறிந்த முடிவுகளை எடுக்கவும், அவர்களுக்கு இடையிலான இடைவெளிகளைக் குறைக்கவும்இரும்பு அல்லாத உலோகத் துறையின் முழுத் திறனையும் வெளிப்படுத்தவும் உதவும் என்றார்.

இந்த முயற்சியைப் பாராட்டிய மத்திய இணையமைச்சர் திரு. சதீஷ் சந்திர துபே, இந்த இணையதளம் தகவல் தெரிவித்தல், விழிப்புணர்வு உருவாக்கம் ஆகியவற்றுக்கு பங்களிக்கும் என்றார். மறுசுழற்சி செய்பவர்கள், அகற்றுபவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், தொழில் சங்கங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் என அனைத்துத் தரப்பினரையும் இணைப்பதற்கான தேசிய தளமாக  செயல்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

***

(Release ID: 2127564)
TS/PLM/RR/DL


(Release ID: 2127589) Visitor Counter : 24
Read this release in: English , Urdu , Hindi , Telugu