விண்வெளித்துறை
மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், உலகளாவிய விண்வெளி ஆய்வு உச்சிமாநாட்டை நாளை தொடங்கி வைக்கிறார்
Posted On:
06 MAY 2025 6:15PM by PIB Chennai
உலகளாவிய விண்வெளி ஆய்வு மாநாடான ஜிஎல்இஎக்ஸ் 2025-ஐ (GLEX 2025) மத்திய விண்வெளி துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் புதுதில்லியில் நாளை தொடங்கி வைக்கிறார். 2025 மே 7 முதல் 9-ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெற உள்ளது.
"புதிய உலகங்களை அடைதல்: விண்வெளி ஆய்வில் மறுமலர்ச்சி" என்ற கருப்பொருளில் இந்த உலகளாவிய உச்சி மாநாடு நடைபெறுகிறது. இது தொடர்பாக புதுதில்லியில் நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், கடந்த பத்து ஆண்டுகளில் விண்வெளித் துறையில் உலகளவில் முன்னணி நாடாக இந்தியா உருவெடுத்திருப்பதை எடுத்துரைத்தார். இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் பயணத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையே காரணம் என்று அவர் கூறினார்.
சர்வதேச விண்வெளி கூட்டமைப்பு, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, இந்திய விண்வெளி சங்கம் ஆகியவை இணைந்து உலகளாவிய விண்வெளி மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளதாகவும் இது விண்வெளித் துறையில் இந்தியாவின் வளர்ச்சியில் ஒரு மைல்கல்லைக் குறிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
36 நாடுகளைச் சேர்ந்த 233 சர்வதேச பிரதிநிதிகள் உட்பட 1800-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். 57 நாடுகளில் இருந்து 1,275 கட்டுரைகள் இதில் சமர்ப்பிக்கப்பட உள்ளன.
இந்த மாநாட்டில் 15 கருப்பொருள் பகுதிகளை உள்ளடக்கிய 10 தொழில்நுட்ப அமர்வுகள் இடம்பெற உள்ளன.
மற்றொரு முக்கிய சிறப்பம்சமாக, இந்திய விண்வெளி புத்தொழில் நிறுவனங்கள், உலகளாவிய விண்வெளி நிறுவனங்கள், இஸ்ரோ உள்ளிட்ட 22 முன்னணி அமைப்புகளின் அரங்குகளைக் கொண்ட விண்வெளி கண்காட்சியும் இதில் இடம் பெற உள்ளது.
***
(Release ID: 2127310)
SM/PLM/RR/KR/DL
(Release ID: 2127314)
Visitor Counter : 23