நிலக்கரி அமைச்சகம்
தமிழ்நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது
Posted On:
02 MAY 2025 5:39PM by PIB Chennai
தமிழ்நாட்டில் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர் திரு விக்ரம் தேவ் தத், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரு என். முருகானந்தம் இடையே சென்னையில் இன்று உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது.
என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு பிரசன்ன குமார் மோட்டுபள்ளி, நிலக்கரி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு சஞ்சீவ் குமார் காசி, கோல் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் (சந்தைப்படுத்தல்) திரு முகேஷ் சவுத்ரி மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
மாநிலத்தின் திட்டமிடப்பட்ட மின் தேவை, பழுப்பு நிலக்கரி மற்றும் நிலக்கரியின் கிடைக்கும் தன்மை, கோடை மற்றும் மழைக்காலங்களில் உச்ச நிலைமைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. என்எல்சி தொடர்பான நிலம் கையகப்படுத்துதல், நெய்வேலி சுரங்கங்களில் எம்-சாண்ட் மணலை உருவாக்கத் தேவையான வசதிகள், பழுப்பு நிலக்கரி சுரங்கங்களுக்கான நிலம் கையகப்படுத்துதல், நெய்வேலி விமான நிலையத்தின் செயல்பாடுகளைத் தொடங்குதல், தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம், என்எல்சியின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம் இடையே கூட்டு முயற்சியை உருவாக்குதல் ஆகியவையும் விவாதிக்கப்பட்டன. இதில் மாநில அரசு தேவையான ஆதரவை வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இன்றைய கூட்டத்தில் மாநில அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை மற்றும் முற்போக்கான அணுகுமுறை விநியோகத் தரப்பு சவால்களைக் கணிசமாகக் குறைக்கும் என்றும், தமிழ்நாட்டிற்கு நம்பகமான, மலிவான மற்றும் நிலையான மின்சார விநியோகத்தை உறுதி செய்யும் என்றும், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் பிரச்சினைகளைத் தீர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
****
(Release ID: 2126217)
SM/PKV/KPG/DL
(Release ID: 2126264)
Visitor Counter : 35