மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

அனுராதா பிரசாத் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராகப் பொறுப்பேற்றார்

Posted On: 02 MAY 2025 2:16PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சகத்தின்  முன்னாள் செயலாளர்  அனுராதா பிரசாத், மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக இன்று பதவி ஏற்றார். ஆணையத்தின் மூத்த உறுப்பினரான லெப்டினன்ட் ஜெனரல் ராஜ் சுக்லா (ஓய்வு) அவருக்கு  பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

அனுராதா பிரசாத் லேடி ஸ்ரீராம் மகளிர் கல்லூரியில் பட்டம் பெற்றார். தில்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார். இங்கிலாந்தின் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் மேம்பாட்டு நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

அனுராதா பிரசாத் 1986 ஆம் ஆண்டு இந்திய பாதுகாப்பு கணக்கு பணி தொகுப்பைச் சேர்ந்தவர். பொதுக் கொள்கை, பொது நிதி மற்றும் கூட்டுறவு கூட்டாட்சி ஆகியவற்றில் அவருக்கு விரிவான அனுபவம் உள்ளது. 37 ஆண்டுகளுக்கும் மேலான தனது பணிக்காலத்தில், அவர் மத்திய அரசின் பாதுகாப்பு, உள்துறை, நிதி, உணவு பதப்படுத்தும் தொழில்கள், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகங்களில் பணியாற்றியுள்ளார், கொள்கை மற்றும் திட்ட உருவாக்கம் மற்றும் செயல்படுத்தலில் ஆழமான அனுபவத்தைப் பெற்றுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சகத்தின் கையகப்படுத்துதல் பிரிவில் நிதி மேலாளராக, பெரிய தளங்களை கையகப்படுத்தும் பணியை அவர் கையாண்டார். நிதி அமைச்சகத்தில், பாதுகாப்பு சேவைகள் மற்றும் ஆயுத தொழிற்சாலை வாரியத்திற்கான நிதி மற்றும் கணக்கியலை அவர் கையாண்டார். உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தில் தனது பணிக்காலத்தில், அனுராதா பிரசாத் குளிர் சங்கிலி உள்கட்டமைப்பு, உணவு சோதனை ஆய்வகங்கள் மற்றும் தொழில்துறை சார்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மூலம் உணவுத் துறையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தார். இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையத்தின் வாரிய உறுப்பினராகவும், தேசிய தொழிற்கல்வி மற்றும் பயிற்சி கவுன்சிலிலும் ஒழுங்குமுறை அனுபவத்தையும் அவர் கொண்டுள்ளார்.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக, தொழிலாளர் குறியீடுகளை வரைவதற்கும், அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களின் தேசிய தரவுத்தளமான இ-ஷ்ரம் போர்ட்டலை உருவாக்குவதற்கும் அவர் பங்களித்தார். ஊழியர் மாநில காப்பீட்டுக் கழகத்தின் தலைமை  இயக்குநர் பொறுப்பில் இருந்த போது,  கோவிட்-19  காலத்தில் தொழிலாளர்களின் சுகாதாரம் மற்றும் நலனுக்கான பல்வேறு முயற்சிகளை அவர் முன்னெடுத்தார்.

உள்துறை அமைச்சகத்தின் மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் செயலகத்தின் செயலாளராக, அவர் மத்திய-மாநில அரசுகளுக்கு  இடையேயான உறவுகளைக் கையாண்டார். பல சிக்கலான மற்றும் உணர்திறன் வாய்ந்த பிரச்சினைகளில் ஒருமித்த கருத்தை உருவாக்கினார், இதன் விளைவாக முக்கிய கொள்கை மாற்றங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் பிற திட்டங்கள் துரிதப்படுத்தப்பட்டன.

பணி ஓய்வுக்குப் பிறகு, அனுராதா பிரசாத் தில்லி அரசின்  காவல் புகார் ஆணையத்தின் உறுப்பினராகப் பணியாற்றினார்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2126098

---  

SM/PKV/KPG/SG


(Release ID: 2126243) Visitor Counter : 24
Read this release in: English , Urdu , Hindi , Gujarati