விவசாயத்துறை அமைச்சகம்
வேளாண் துறையில் சான்றுகள் அடிப்படையிலான கொள்கை உருவாக்கம் தேவை: ஐ.சி.ஏ.ஆர் தலைமை இயக்குநர்
Posted On:
25 APR 2025 5:45PM by PIB Chennai
தேசிய வேளாண் அறிவியல் அகாடமி (நாஸ்) மற்றும் வேளாண் அறிவியல் முன்னேற்றத்திற்கான அறக்கட்டளை ஆகியன (டாஸ்) இணைந்து இரண்டு புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானிகளான பகுதி வறண்ட வெப்பமண்டலத்திற்கான சர்வதேச பயிர் ஆராய்ச்சி நிறுவனம் தலைமை இயக்குநர் டாக்டர் ஹிமான்ஷு பதக் மற்றும் வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை (DARE) மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கான கவுன்சில் தலைமை இயக்குநர் டாக்டர் எம்.எல். ஜாட் ஆகியோரைக் கௌரவிக்கும் பாராட்டு விழாவை நடத்தின.
வேளாண் அறிவியல், ஆராய்ச்சி மற்றும் கொள்கை மேம்பாடு ஆகியவற்றில் கூட்டு முயற்சிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட டாஸ் மற்றும் நாஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது இந்த நிகழ்ச்சியின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.
இந்த நிகழ்ச்சியின் போது, டாக்டர் எம்.எல்.ஜாட், பிரதமர் நரேந்திர மோடியின் அமிர்த காலம் குறித்த தொலைநோக்கு பார்வையை அடைய வேளாண் சகோதரத்துவம் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். வேளாண் துறையில் அறிவியல் மற்றும் சான்றுகள் அடிப்படையிலான கொள்கை வகுப்பதன் அவசரத் தேவையை வலியுறுத்திய அவர், விவசாயிகளுக்கு நிலையான வாழ்வாதாரங்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். விவசாயிகளின் முகத்தில் புன்னகையை வரவழைக்கவும், நமது இலக்குகளை நாட்டின் இலக்குகளுடன் இணைக்கவும் பொதுவான கூட்டு இயக்கத்திற்கான நேரம் இது என்று அவர் மேலும் கூறினார்.
சமூக மாற்றத்தில் அறிவியலின் முக்கிய பங்கு குறித்து டாக்டர் ஹிமான்ஷு பதக் உரையாற்றினார். ஒவ்வொரு சமூகமும் அறிவியல் சிந்தனையை ஏற்றுக்கொண்டு ஊக்குவிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், சர்வதேச வேளாண் ஆராய்ச்சிக்கான ஆலோசனைக் குழு (CGIAR) மற்றும் நாஸ் இடையேயான கூட்டு முயற்சிகளின் கடந்த கால வெற்றிகளையும் சுட்டிக்காட்டினார். இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், மத்திய தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சில், சிறப்பு புதுமைப் படைப்புக் குழு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்ச்சியான கூட்டாண்மை, இந்தியாவில் வேளாண் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை மேலும் வலுப்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த விழாவில் டாக்டர் பி.கே.ஜோஷி உள்ளிட்ட முன்னணி வேளாண் வல்லுநர்கள் மற்றும் பிரமுகர்களின் உரைகளும் இடம்பெற்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2124346
***
TS/PKV/DL
(Release ID: 2124410)
Visitor Counter : 36