குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
ஆளுநர் திரு ஆர் என் ரவி தான் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு ஏற்பவும் அரசியலமைப்பு நியமனத்துக்கு ஏற்பவுமே செயல்படுகிறார் என்று தமிழகத்தில் உள்ள மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவர் கூறினார்
Posted On:
25 APR 2025 4:59PM by PIB Chennai
உதகையில் நடைபெற்று வரும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜகதீப் தன்கர் தமிழக ஆளுநரின் செயல்பாடுகளுக்குப் பாராட்டு தெரிவித்தார். இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் 159-வது பிரிவின் கீழ் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட ஆளுநர், இந்த துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்துகிறார். குடியரசுத் தலைவரின் பதவிப் பிரமாணத்தைப் போலவே ஆளுநரின் பதவிப் பிரமாணமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் உட்பட அனைத்து சட்டங்களையும் பாதுகாப்பதே ஆளுநர் எடுத்துக் கொண்ட உறுதிமொழியாக உள்ளது என்று கூறினார். அவரது சத்தியப் பிரமாணத்தின் மூலம், தமிழக மக்களின் சேவை மற்றும் நல்வாழ்வுக்காக அவர் அர்ப்பணிப்புடன் உள்ளார்.
கல்வித்துறைக்கு மிகவும் பொருத்தமான இதுபோன்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதன் மூலம், ஆளுநர் ரவி தனது பதவிப் பிரமாணத்தை உறுதிப்படுத்துகிறார். 2022-ம் ஆண்டில் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்த அவர் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
"கடந்த காலங்களில் நாட்டின் மிகச்சிறந்த கல்வி நிறுவனங்களில் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்கள் இருந்தனர். அவர்களை இப்போது நவீன துணைவேந்தர்கள் என நாம் அழைக்கிறோம். இன்றைய துணைவேந்தர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்களாக இருப்பதுடன், தொலைநோக்குப் பார்வை கொண்டவர்களாகவும் திகழ்கின்றனர். கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காக தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள் என்று தெரிவித்தார். அவர்களுக்கு மிகப்பெரிய பணிகள் உள்ளதாகவும், அவை கடினமானதாக இருந்தபோதிலும், அதனை சிறப்பான முறையில் மேற்கொள்வதற்கான வலிமையைப் பெற்றிருப்பதாகவும் குடியரசு துணைத் தலைவர் நம்பிக்கை தெரிவித்தார். மாணவர்களுக்கு பயனளிக்க கூடிய வகையில், கல்வியின் தரத்தை உயர்த்தும் வல்லமை படைத்தவர்களாக கல்வியாளர்கள் திகழ்கின்றனர் என்றும் அவர் கூறினார். மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராக பதவி வகிப்பவர்கள் தங்களது நிறுவனங்கள் மீது நம்பிக்கை வைத்து தயக்கமின்றி செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மாறிவரும் கல்வியின் முக்கியத்துவத்தைச் சுட்டிக் காட்டிய குடியரசுத் துணைத் தலைவர், இந்தியா மட்டுமின்றி அனைத்து உலக நாடுகளும் கடும் சவால்களையும், வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம் சார்ந்த இடையூறுகளையும் எதிர்கொண்டு வருவதாக குறிப்பிட்டார். இத்தகைய சவால்கள் தொழிற்புரட்சியைக் காட்டிலும் மிகவும் கடினமானது என்று அவர் தெரிவித்தார். மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுப்பது கடினமான செயல் என்று அவர் குறிப்பிட்டார். இதுபோன்ற காரணிகளால் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சங்களிலும் பாதிப்பு ஏற்படுவதாகவும், எனவே துணைவேந்தர்கள் பல்கலைக்கழகங்களை முறையாக வழிநடத்த வேண்டும் என்றும், தரமான கல்வியை வழங்கும் வகையில், திறமையான நிர்வாகிகளாக செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். எத்தகைய சவாலாக இருந்தபோதிலும், அதனை எதிர்கொள்வதுடன், நாட்டிற்கும், உலகிற்கும் சிறப்பான முடிவுகளை வழங்கும் வகையில் தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஆசிரியர்கள், சிறந்த ஆசிரியர்கள் கிடைக்கும் தன்மை, ஆசிரியர்களை தக்கவைத்துக் கொள்வது, சில சமயங்களில் கூடுதல் எண்ணிக்கையிலான ஆசிரியர்களை நியமனம் செய்வது போன்ற சவால்களை துணைவேந்தர்கள் எதிர்கொண்டு வருவதாக திரு ஜக்தீப் தன்கர் தெரிவித்தார். துணைவேந்தர்கள் தங்களுக்கு இடையே பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொள்வதுடன், நவீன தொழில்நுட்பத்தையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அண்மையில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் மனவேதனை அளிப்பதாக உள்ளது என்று திரு ஜக்தீப் தன்கர் கூறினார். அப்பாவி மக்களின் உயிர்களைக் கொன்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதுடன், இதுபோன்ற செயல்களுக்கு எதிரான மக்களின் மனநிலையோடு இணைந்து கொள்வதாக கூறினார். தீவிரவாதம் என்பது உலகளவில் மனிதகுலத்திற்கு எதிரான அச்சுறுத்தல் என்று கூறிய அவர், அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து அதனை எதிர்கொள்ள வேண்டும் என்பதை இந்த தாக்குதல் சம்பவம் நினைவூட்டுவதாக குறிப்பிட்டார். இந்தியா அமைதியை மிகவும் விரும்பும் நாடாக உள்ளது என்றும், நமது நாட்டின் நாகரீக நெறிமுறைகள் வசுதைவ குடும்பகத்தை பிரதிபலிப்பதாக உள்ளது என்றும் திரு ஜக்தீப் தன்கர் தெரிவித்தார்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு பல்வேறு தரப்பினருடன் மேற்கொண்ட விரிவான விவாதங்களுக்குப் பிறகு தேசிய கல்விக்கொள்கை வடிவமைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இந்த கொள்கை நாட்டின் நாகரீக நெறிமுறைகளை பிரிதிபலிப்பதுடன், பல்துறை கற்றலை ஊக்குவிப்பதாகவும் அவர் கூறினார். தேசிய கல்விக் கொள்கையானது இந்தியாவில் உள்ள மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது என்றும், ஒரு நபரின் மேம்பாட்டிற்கு கல்வி அவசியம் என்பதை இது வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"தேசிய கல்விக் கொள்கையின் மிக முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாக மாணவர்கள் தங்கள் தாய்மொழியை கற்க அனுமதிக்கிறது என்பதை சுட்டிக்காட்டிய அவர், அது நம் அனைவரையும் காலனித்துவ ஆதிக்கத்திலிருந்து வெளிக்கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்தார். உள்ளூர் மொழிகளில் மருத்துவம், பொறியியல் படிப்புகளை கற்பதற்கு தேசிய கல்விக் கொள்கை வழிவகை செய்துள்ளதாக அவர் கூறினார்.
நாட்டின் உயர்கல்வியில் ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி., போன்ற கல்வி நிறவனங்கள் மட்டுமின்றி, நவீன தொழில்நுட்ப சூழலுக்கேற்ப தனித்துவமிக்க கல்வி நிறுவனங்களுடனான ஒருங்கிணைப்பு அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
நாட்டின் கல்வி பரிணாம வளர்ச்சியில் தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க பங்களிப்பை எடுத்துரைத்த குடியரசுத் துணைத் தலைவர், "தமிழ்நாடானது காஞ்சீபுரம், எண்ணாயிரம் போன்ற சிறப்பான கற்றல் மையங்களின் முக்கிய இடமாக உள்ளது என்றும் அவர் கூறினார். எண்ணாயிரம் நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களை ஈர்த்துள்ளதாகத் தெரிவித்தார். அத்தகைய கல்வி நிறுவனங்களின் புகழை மீட்டெடுக்கும் வகையில் இதுபோன்ற மாநாடுகள் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டில், 1857-ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது நம் அனைவருக்கும் பெருமையளிப்பதாக உள்ளது என்று தெரிவித்த அவர், நவீன கல்வியில் தமிழகம் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது என்றும் பெருமிதம் தெரிவித்தார்.
நாட்டின் வளமான மொழியியல் பாரம்பரியம், குறிப்பாக தமிழின் வரலாற்று சிறப்புமிக்க அங்கீகாரம் குறித்து எடுத்துரைத்த அவர், "நமது மொழிகள், அவற்றின் செழுமை, ஆழம் ஆகியவை நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக உள்ளன என்றும் கூறினார். சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, வங்காளம் மற்றும் பிற மொழிகளில் உள்ள இலக்கியங்கள் அறிவின் தங்கச் சுரங்கமாக திகழ்கிறது என்று கூறினார்.
செம்மொழி அந்தஸ்தை பெற்ற முதல் மொழியாக தமிழ்மொழி உள்ளது என்பது தமிழகத்துக்கும், நாட்டுக்கும் பெருமை அளிப்பதாக உள்ளது என்று கூறினார். தமிழ்மொழிக்கு கடந்த 2004-ம் ஆண்டில் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டதை அப்போது அவர் நினைவு கூர்ந்தார். தற்போது 11 மொழிகள் செம்மொழி அந்தஸ்து பெற்றுள்ளதாகவும், வளமான கலாச்சாரம், அறிவு, இலக்கியம், தொன்மை, ஆழ்ந்த சிந்தனை ஆகியவற்றைக் கொண்டவையாக செம்மொழிகள் உள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2124316
***
TS/SV/RJ/DL
(Release ID: 2124385)
Visitor Counter : 11