உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகமானது குண்ட்லியில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனத்துடன் இணைந்து அதன் வளாகத்தில் இன்று சுஃப்லாம் 2025 நிகழ்வைத் தொடங்கி உள்ளது. இது உணவு பதனத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு தூண்டுதலாக இருக்கும்
Posted On:
25 APR 2025 4:43PM by PIB Chennai
ஹரியானாவின் குண்ட்லியில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் ஆர்வமுள்ள தலைவர்கள் மற்றும் வழிகாட்டிகளுக்கான புத்தொழில் மன்றத்தின்(சுஃப்லாம் )இரண்டாவது மாநாட்டை மத்திய உணவு பதனத் தொழில்கள் அமைச்சகம் இன்று நிறுவன வளாகத்தில் தொடங்கியது. புதிய கண்டுபிடிப்புகள், தொழில்முனைவோர், ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் உணவுப் பதனத் துறையை வலுப்படுத்துவது இந்த இரண்டு நாள் மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.
இந்த மாநாட்டை மத்திய உணவுப் பதனத் தொழில்கள் அமைச்சர் திரு சிராக் பாஸ்வான் முறைப்படித் தொடங்கிவைத்தார். உணவுப் பொருள் சார்ந்த புதிய கண்டுபிடிப்பில் நாட்டை உலகளாவிய தலைமையாக மாற்ற இந்தியாவின் இளைஞர்களுக்கு அதிகாரமளிப்பது அவசியம் என்பதை அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
சரியான திறன்களை அளித்து நமது இளைஞர்களை தயார் செய்வதன் மூலம் இதில் உள்ள வாய்ப்புகளை சிறப்பாக வெளிக் கொண்டு வருவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். உணவுப் பதன தொழில்துறை எல்லையற்ற வாய்ப்புகளை கொண்டுள்ளது என்றும், புதிய கண்டுபிடிப்பில் கவனம் செலுத்துவதன் மூலம் நமது சொந்தத் தேவைகளை எதிர்கொள்வது மட்டுமின்றி உலகளாவிய உணவுச் சந்தையாகவும் இந்தியாவை மாற்ற முடியும் என்று அவர் தெரிவித்தார். புதிய கண்டுபிடிப்பு மற்றும் திறன் கட்டமைப்பிற்கான பயணம் நமது பொருளாதாரத்தை வலுப்படுத்துவது மட்டுமின்றி நாடு முழுவதும் ஏராளமான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார். இந்தியாவின் உணவுப் பதனத் திறனை விரிவுபடுத்தவும், விவசாயிகளுக்கு அதிகாரமளிக்கவும் ஒவ்வொரு கட்டத்திலும் இந்த தொழில்துறைக்கு ஆதரவளிக்கவும் தமது அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது என்று திரு சிராக் பாஸ்வான் தெரிவித்தார்.
மத்திய உணவுப் பதன தொழில்கள் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் சுப்ரதா குப்தா குண்ட்லியில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம்,தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஹரீந்தர் சிங் ஓபராய் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.
தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட 23 மாநிலங்களைச் சேர்ந்த 250 புத்தொழில் நிறுவனங்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளன. புதிதாக உருவாகி வரும் தொழில்முனைவோர் பங்கேற்பு, நிபுணர் குழு விவாதங்கள் உள்ளிட்ட அமர்வுகளுடன் இந்த மாநாடு நாளையும் தொடர்ந்து நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2124313
***
TS/SMB/AG/DL
(Release ID: 2124378)
Visitor Counter : 12