பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பஹல்காமில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்களுக்கு விரைவில் உரிய பதிலடி கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்: பாதுகாப்பு அமைச்சர்

Posted On: 23 APR 2025 5:21PM by PIB Chennai

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு விரைவில் தகுந்த பதிலடி கிடைக்கும் என்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் உறுதிபட தெரிவித்துள்ளார். ஏப்ரல் 23-ம் தேதி புதுதில்லியில் நடைபெற்ற இந்திய விமானப்படையின் மார்ஷல் அர்ஜன் சிங்  நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர், பயங்கரவாதத்தை எந்த வகையிலும் சகித்துக்கொள்ள முடியாது என்று திட்டவட்டமாககா கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று அவர் கூறினார்.

"இந்தியா ஒரு பழமை வாய்ந்த நாகரிகம் கொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாடு என்றும், இதுபோன்ற எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கைகளையும் ஒருபோதும் சகித்துக்கொள்ளாதுஎன்றும் கூறினார். இந்தக் கோழைத்தனமான செயலுக்கு எதிராக நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் ஒன்றிணைந்து நிற்பதாகவும் கூறினார். பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்கள் மட்டுமின்றி, இந்திய மண்ணில் இதுபோன்ற மோசமான செயல்களை திரைக்குப் பின்னால் இருந்து சதி செய்தவர்களுக்கும் விரைவில் உரிய பதிலடி கிடைக்கும்" என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார்

எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களின் பின்னணி குறித்து கருத்து தெரிவித்த பாதுகாப்பு அமைச்சர், இதுபோன்ற தவறான செயல்களின் விளைவாக நாடுகள் செயலிழந்து போனதற்கு வரலாறு சாட்சியாக உள்ளது என்று கூறினார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் தங்களது அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு திரு ராஜ்நாத் சிங் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொண்டார். "மதத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலில் பல அப்பாவி மக்களை நாடு இழந்துள்ளது என்றும், இது மிகவும் மனிதாபிமானமற்ற செயல் என்றும், இச்சம்பவம் அனைவரையும் ஆழ்ந்த மனவேதனையில் ஆழ்த்தியுள்ளது என்றும் கூறினார். இந்த துயரமான தருணத்தில், உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் கடற்படை தளபதி தினேஷ் கே திரிபாதி, விமானப்படை தளபதி ஏர் சீப் மார்ஷல் ஏ.பி.சிங், மூத்த சிவில் மற்றும் ராணுவ அதிகாரிகள், பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற விமானப்படை வீரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணலாம் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2123860

****

 TS/SV/RJ/DL


(Release ID: 2123916) Visitor Counter : 30