எரிசக்தி அமைச்சகம்
இந்திய-நேபாள எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்த மத்திய அமைச்சர் திரு. மனோகர் லால், நேபாளத்திற்கு பயணம் மேற்கொண்டார்
Posted On:
22 APR 2025 9:36PM by PIB Chennai
மத்திய மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. மனோகர் லால், நேபாளத்திற்கு இன்று மேற்கொண்ட குறிப்பிடத்தக்க பயணம், இந்திய-நேபாள எரிசக்தி ஒத்துழைப்பில் புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது. நேபாளத்தின் எரிசக்தி, நீர்வளம் மற்றும் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் திரு. தீபக் கட்கா மற்றும் இரு நாடுகளின் மூத்த அதிகாரிகளுடன் இணைந்த மத்திய அமைச்சர், பிராந்திய இணைப்பு மற்றும் நீடித்த மின்சார வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முக்கிய இருதரப்பு எரிசக்தி முன்முயற்சிகள் குறித்து ஆய்வு செய்தார்.
நேபாளத்தின் சங்குவாசபா மாவட்டத்தில் 900 மெகாவாட் அருண்-3 நீர்மின் திட்டத்தை பார்வையிட்ட திரு மனோகர் லால், இந்தியாவின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான எஸ்.ஜே.வி.என் லிமிடெட் உருவாக்கி வரும் இந்த மைல்கல் திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார். அருண்-3 திட்டம் நீர்மின் உற்பத்தித் துறையில் இந்தியா-நேபாளம் இடையேயான வலுவான கூட்டாண்மையின் அடையாளமாக விளங்குகிறது.
பின்னர் காத்மாண்டுவில், திரு மனோகர் லால் மற்றும் திரு தீபக் கட்கா முன்னிலையில், இந்தியாவின் மகாரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமான பவர்கிரிட் மற்றும் நேபாள மின்சார ஆணையம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், அதிக திறன் கொண்ட எல்லை தாண்டிய பரிமாற்ற உள்கட்டமைப்பை செயல்படுத்த இந்தியாவில் ஒன்று மற்றும் நேபாளத்தில் ஒன்று என இரண்டு கூட்டு முயற்சி நிறுவனங்களை இணைக்க வழி வகுக்கிறது.
முன்மொழியப்பட்ட திட்டங்களில் 400 கிலோவோல்ட் இறுவா (நேபாளம்) – நியூ பூர்னியா (இந்தியா) மற்றும் 400 கிலோவோல்ட் டோதோதரா (நேபாளம்) – பரேலி (இந்தியா) இரட்டை சுற்று பரிமாற்ற அமைப்புகளின் மேம்பாடு ஆகியவை அடங்கும். இந்த முக்கியமான பரிமாற்ற இணைப்புகள் இரு நாடுகளுக்கும் இடையிலான மின் பரிமாற்ற திறன்களை கணிசமாக அதிகரிக்கும், எரிசக்தி பாதுகாப்பு, தொகுப்பு ஸ்திரத்தன்மை மற்றும் பிராந்தியம் முழுவதும் பொருளாதார வளர்ச்சியை வளர்க்கும்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பவர்கிரிட் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் யதீந்திர திவேதி மற்றும் நேபாள மின்சார ஆணையத்தின் தொகுப்பு செயல்பாட்டுத் துறை இயக்குநர் திரு. கமல் ஆச்சார்யா ஆகியோர் கையெழுத்திட்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2123637
------
RB/DL
(Release ID: 2123648)
Visitor Counter : 23