ஜல்சக்தி அமைச்சகம்
தேசிய தூய்மை கங்கை இயக்கத்தின் கீழ் இந்திய வனவிலங்குகள் நிறுவனம் செயல்படுத்தும் முக்கிய திட்டங்கள் - மத்திய அமைச்சர் திரு சி.ஆர். பாட்டீல் ஆய்வு செய்தார்
Posted On:
17 APR 2025 2:37PM by PIB Chennai
புதுதில்லியில் ஜல் சக்தி அமைச்சகத்தின் ஆதரவுடன் இந்திய வனவிலங்குகள் நிறுவனம்(டபிள்யு.ஐ.ஐ.) செயல்படுத்தும் பல்வேறு திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு சி.ஆர்.பாட்டீல் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜல் சக்தி அமைச்சகம், இந்திய வனவிலங்குகள் நிறுவனம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நீர்வாழ் பல்லுயிர் பெருக்கத்தை மீட்டெடுத்தல், நதிகளின் தூய்மையை மேம்படுத்துதல், உள்ளூர் திறன்களை உருவாக்குதல், நதிகள் பாதுகாப்பில் உள்ளூர் சமூகங்களை ஈடுபடுத்துதல் ஆகியவற்றில் தூய்மை கங்கை தேசிய இயக்கமும் இந்திய வன விலங்குகள் நிறுவனமும் மேற்கொண்டு வரும் பாராட்டத்தக்க பணிகளுக்கு மத்திய அமைச்சர் பாராட்டுத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது, இந்த முன்முயற்சிகளின் கீழ் உருவாக்கப்பட்ட அறிவுசார் வெளியீடுகளையும் திரு சி.ஆர்.பாட்டீல் வெளியிட்டார். இந்த வெளியீடுகள் அமைச்சகத்தின் பல்லுயிர் பாதுகாப்பு முயற்சிகளை எடுத்துரைக்கின்றன.
இக்கூட்டத்தின்போது ஜல் சக்தி அமைச்சகமும் இந்திய வன விலங்குகள் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள டிஜிட்டல் தகவல் தளமான www.rivres.in என்ற இணையதளம் தொடங்கி வைக்கப்பட்டது. கங்கை, நர்மதா, கோதாவரி, காவிரி உள்ளிட்ட முக்கிய இந்திய நதிகளில் சுற்றுச்சூழல் நுண்ணறிவுகள், பாதுகாப்பு ஆய்வுகள், பல்லுயிர் தன்மை, சமூக ஈடுபாட்டு நடவடிக்கைகள் போன்ற தகவல்களை வழங்கும் ஒரு விரிவான டிஜிட்டல் மையமாக இந்த தளம் அமைந்துள்ளது.
ஜல் சக்தி அமைச்சகம், இந்திய வனவிலங்குகள் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்ச்சியான ஒத்துழைப்பின் மூலம் நிலையான சூழல் பாதுகாப்பு முயற்சிகளை முன்னெடுப்பதற்கான உறுதிப்பாட்டுடன் இந்த ஆய்வுக் கூட்டம் நிறைவடைந்தது.
************************************
(Release ID: 2122386)
TS/PL/RR/KR
(Release ID: 2122406)
Visitor Counter : 30