சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையின் 5-வது பட்டமளிப்பு விழாவுக்கு மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜே.பி.நட்டா தலைமை தாங்கினார்

Posted On: 15 APR 2025 2:29PM by PIB Chennai

ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையின் ஐந்தாவது பட்டமளிப்பு விழாவுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் திரு. ஜகத் பிரகாஷ் நட்டா தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி, உத்தராகண்ட் சுகாதாரம் மற்றும் கல்வி அமைச்சர் திரு தான் சிங் ராவத், மக்களவை உறுப்பினர்கள் திரு அஜய் பட், திரு அஜய் தம்தா மற்றும் திரு திரிவேந்திர சிங் ராவத் மற்றும் உத்தராகண்ட் சட்டப் பேரவைத் தலைவர் திருமதி ரிது கந்தூரி பூஷண் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு ஜே.பி.நட்டா, "பட்டமளிப்பு விழா என்பது மாணவர்களின் சாதனைகளை அங்கீகரிப்பதைக் குறிக்கும் ஒரு சிறப்பு நிகழ்வு" என்று கூறினார். நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழை நபருக்கும் குறைந்த கட்டணத்தில்  தரமான சுகாதார சேவையை வழங்குவதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

மருத்துவக் கல்வி மற்றும் சேவைகளில் நாடு முழுவதும் உள்ள எய்ம்ஸ் நிறுவனங்களின் சாதனைகளை திரு ஜே.பி.நட்டா எடுத்துரைத்தார். "இந்த நூற்றாண்டுக்கு முன்பாக, நாட்டில் ஒரு எய்ம்ஸ் மட்டுமே இருந்த நிலையில் தற்போது 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. எய்ம்ஸ் மருத்துவமனை ரிஷிகேஷ் அதன் உயர்ந்த சேவைகளின் காரணமாக சுகாதார நிறுவனங்களிடையே ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளது என்று அவர் கூறினார்.

குடிமக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த சுகாதார சேவையை வழங்குவதில் மத்திய அரசின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார். "சுகாதார சேவையை வழங்குவதில் அரசு கவனம் செலுத்துகிறது, இது குணப்படுத்துவது என்று மட்டுமல்லாமல், தடுப்பு, நோய்த்தடுப்பு மற்றும் மறுவாழ்வு அளிப்பதிலும் கவனம் செலுத்துகிறது" என்று அவர் கூறினார்.

சுகாதாரத் துறையில் மத்திய அரசின் சாதனைகளை எடுத்துரைத்த திரு நட்டா, "தற்போது நாடு முழுவதும் 1.75 லட்சம் ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் செயல்பட்டு சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு தொடர்பான பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில், நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகள் 101% அதிகரித்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் எம்பிபிஎஸ் இடங்கள் 130% அதிகரித்துள்ளன, முதுநிலை இடங்கள் 138% அதிகரித்துள்ளன. இதேபோல், துணை மருத்துவத்தில் சேவை செய்வதற்காக, 157 செவிலியர் கல்லூரிகளும் நிறுவப்படுகின்றன. அவை மருத்துவக் கல்லூரிகளுடன் இணைக்கப்படும்" என்று அவர் மேலும் கூறினார்.

ஹெலிகாப்டர் மற்றும் ஆளில்லா விமான சேவையை திறம்பட பயன்படுத்தி, 309 ஆபத்தான நோயாளிகளை மீட்டதற்காக எய்ம்ஸ் ரிஷிகேஷ் நிறுவனத்தை மத்திய சுகாதார அமைச்சர் பாராட்டினார். மாநிலத்தின் தொலைதூர மற்றும் பின்தங்கிய பகுதிகளுக்கு சேவை செய்ய தொலை மருத்துவம் (இ சஞ்சீவனி) போன்ற டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்துவதில் நாட்டின் சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக ரிஷிகேஷ் எய்ம்ஸ் திகழ்வதாகவும் அவர் பாராட்டினார்.

ஒவ்வொரு எம்.பி.பி.எஸ் மாணவருக்கும் அரசு ரூ.30-35 லட்சம் வரை செலவிடுகிறது என்பதைக் குறிப்பிட்ட அவர், புதிய மருத்துவர்கள் தங்கள் தொழில்முறை வாழ்க்கையைத் தொடங்கும்போது அதிக பொறுப்புகளை ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மாணவர்கள் தங்கள் பணிகளை கருணை, நேர்மை மற்றும் அர்ப்பணிப்புடன் அணுக வேண்டும் என்று ஊக்குவித்து அமைச்சர் திரு நட்டா தனது உரையை நிறைவு செய்தார்.

 

***

(Release ID: 2121816)
TS/IR/RR/KR


(Release ID: 2121847) Visitor Counter : 21


Read this release in: English , Urdu , Hindi