அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட நீருக்குள் ஒலியியல் சோதனை வசதிக்கான சர்வதேச சான்றிதழை டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டினார்
Posted On:
12 APR 2025 5:40PM by PIB Chennai
சென்னையில் உள்ள தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம் நீருக்குள் ஒலியியல் சோதனை வசதிக்காக உலகளாவிய அங்கீகாரம் மற்றும் சர்வதேச சான்றிதழைப் பெற்றதற்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை, பணியாளர்நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று பாராட்டு தெரிவித்தார். நீருக்குள் ஒலியியல் மற்றும் கடல் தொழில்நுட்பத்தில் அறிவியல் தன்னம்பிக்கையை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் இது ஒரு பெருமைமிகு மைல்கல் என்று அவர் வர்ணித்தார்.

நினைவுப் பலகையைத் திறந்து வைத்த பின் நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், நீருக்குள் ஒலி கண்டறியும் ஹைட்ரோஃபோன்கள், டிரான்ஸ்டியூசர்கள், ஒலி மோடம்கள் போன்ற பல வகையான கருவிகளின் துல்லியமான சோதனை, அளவுத்திருத்தம் உள்ளிட்ட வசதிகளை நேரில் கண்டறிந்தார். இது ராணுவம் மற்றும் சிவில் சமூகப் யன்பாடுகளுக்கு இன்றியமையாதது.
இந்த வசதியை "முக்கியமான தேசிய சொத்து" என்று விவரித்த அமைச்சர், கடல் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் தன்னம்பிக்கையை வலுப்படுத்துவதில் இதன் முக்கிய பங்களிப்பை எடுத்துரைத்தார். "ஒலி சோதனை வசதி நமது கடல் கண்காணிப்பு திறன்களை மேம்படுத்தும், சுனாமி கண்டறியும் அமைப்புகளுக்கு உதவும், அதன் ராணுவப் பயன்பாடுகள் மூலம் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும்" என்று அவர் கூறினார்.

2004 ஆம் ஆண்டு புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்ட ஏடிஎஃப், ஹைட்ரோஃபோன் அளவுத்திருத்தத்திற்கான தேசிய சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான அங்கீகார வாரியத்தால் அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் ஒரே நிறுவனமாகும். 2005 முதல், இந்த அங்கீகாரத்தை இது பராமரித்து வருகிறது. மேலும் கடற்படை ஆய்வகங்கள்,ஐஐடிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பெல், எல்&டி, டாடா பவர் போன்ற முக்கிய தொழில்துறை நிறுவனங்கள் உட்பட பரந்த அளவிலான பயனர்களுக்கு சேவை வழங்குகிறது.
2018 ஆம் ஆண்டில், இந்த வசதியின் உலகளாவிய திறன், அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா உட்பட ஏழு நாடுகளின் ஆய்வகங்களுடன் இணைந்து பிரிட்டன் தேசிய இயற்பியல் ஆய்வகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு முக்கிய ஒப்பீட்டு சோதனையில் பங்கேற்றபோது சரிபார்க்கப்பட்டது. ஏடிஎஃப்-ன் அளவுத்திருத்த முடிவுகள் சர்வதேச அளவுகோல்களுடன் பொருந்தின. இதனால் சிறந்த உலகளாவிய ஆய்வகங்களுடன் தனது சமநிலையை இது நிறுவியது.
ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, இந்த வசதி சமீபத்தில் பாரிஸில் உள்ள சர்வதேச எடைகள் மற்றும் அளவீடுகள் பணியகத்தின் கீழ் நீருக்குள் ஒலியியல் துறை இந்தியாவின் "நியமிக்கப்பட்ட ஆய்வகமாக" சிஎஸ்ஐஆர்-என்பிஎல் மூலம் அங்கீகரிக்கப்பட்டது. இது ஜனவரி 30, 2024 முதல் அமலுக்கு வந்தது. இதன் பொருள் தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம் இப்போது நீருக்குள் ஒலியியல் அளவீடுகளுக்கான தேசிய தரநிலைகளைக் கொண்டுள்ளது - இது ராணுவத் துறைகளில் அளவீட்டு துல்லியத்தை உறுதி செய்வதற்கு முக்கிய பொறுப்பாகும்.

இந்த அங்கீகாரம் இந்தியாவின் அறிவியல் நம்பகத்தன்மையை அதிகரிப்பது மட்டுமின்றி, நீருக்கடியில் ஆராய்ச்சிக்கும் கடல்சார் தொழில்நுட்பத்தில் உலகளாவிய ஒத்துழைப்புகளுக்கான வாய்ப்புகளுக்கும் வழிவகுக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடல் ஆய்வு மற்றும் கடல்சார் பாதுகாப்பில் இந்தியா தனது லட்சியங்களை அதிகரிக்கும் போது, ஒலியியல் சோதனை வசதி எதிர்கால தொழில்நுட்பங்களை வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்கப் பங்கை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நாட்டின் ஆழ்கடல் முயற்சிகளுக்கு துல்லியம், உள்நாட்டு வலிமை ஆகிய இரண்டையும் வழங்கும்.
****
SMB/DL
(Release ID: 2121285)
Visitor Counter : 37