இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
பீகார் மாநிலம் பாட்னாவில் நாளை ‘ஜெய் பீம் பாதயாத்திரைக்கு’ மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமை தாங்குகிறார்
Posted On:
12 APR 2025 3:56PM by PIB Chennai
மத்திய இளைஞர் நலன், விளையாட்டு, தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டவியா, 2025, ஏப்ரல் 13 அன்று பீகார் மாநிலம் பாட்னாவில் 'ஜெய் பீம் பாதயாத்திரை'க்கு தலைமை தாங்குகிறார். இதில் 10,000-க்கும் அதிகமான மை பாரத் தன்னார்வலர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் அனைத்து முக்கிய மாநிலத் தலைநகரங்களிலும் இதேபோன்ற பாதயாத்திரைகள் ஒரே நேரத்தில் நடைபெறும். சமத்துவம், நீதி, சகோதரத்துவம் பற்றிய பாபாசாகேபின் தொலைநோக்குப் பார்வைக்கு கூட்டாகப் புகழ் சேர்க்கும் வகையில் ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஒன்றிணைத்து, மாநிலத் தலைநகரங்களில் நாடு தழுவிய பாதயாத்திரை நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
பாட்னாவில் வரலாற்றுச் சின்னமான காந்தி மைதானத்தில் இருந்து பாதயாத்திரை தொடங்கும். அம்பேத்கரின் மேற்கோள்களுடன் சமூக சீர்திருத்தம் குறித்த நேரடி கலை மற்றும் வீதி நாடக நிகழ்ச்சிகள், இளைஞர்களுக்கான உறுதிமொழிகள், அவரது மரபால் ஈர்க்கப்பட்ட இசை-நாடகச் நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.
‘ஜெய் பீம் பாதயாத்திரை’யின் முக்கிய சிறப்பம்சங்களில், மை பாரத் தன்னார்வலர்களால் நாடு தழுவிய அரசியல் சாசன முகவுரை வாசிப்பு மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அம்பேத்கர் நினைவிடங்களில் சிலை சுத்தம் செய்யும் பணிகள் ஆகியவை அடங்கும். இது அரசியலமைப்பு மாண்புகள் மற்றும் குடிமைப் பொறுப்புக்கான ஒன்றுபட்ட உறுதிப்பாட்டைக் குறிக்கிறது.
மகாராஷ்டிராவின் மும்பையில் நடைபெறும் பாதயாத்திரைக்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா காட்சே தலைமை தாங்குவார். இதில் ஆயிரக்கணக்கான மை பாரத் தன்னார்வலர்கள் மற்றும் குடிமக்கள் பங்கேற்கின்றனர்.
இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிக்கவும், குடிமை விழிப்புணர்வை வளர்க்கவும், இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிலை சுத்தம் செய்தல், மலர் அஞ்சலி செலுத்துதல், கட்டுரை எழுதுதல், விவாதம், ஓவியம் மற்றும் பள்ளிகள், கல்லூரிகளில் முழக்கப் போட்டிகள் உள்ளிட்டவை பாதயாத்திரைக்கு முந்தைய நடவடிக்கைகளாக நடந்து வருகின்றன.
இந்திய அரசியலமைப்பின் 75 ஆண்டுகளைக் கொண்டாடுவதன் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்படும் 24 பாதயாத்திரைகள் தொடரில் 'ஜெய் பீம் பாதயாத்திரை' ஒன்பதாவது ஆகும். இந்த இயக்கத்தின் கீழ் நடைபெறும் ஒவ்வொரு பாதயாத்திரையும் இன்றைய இளைஞர்களை நீதி, சமத்துவம், சுதந்திரம் மற்றும் சகோதரத்துவத்தின் மதிப்புகளுடன் இணைக்கும் ஓர்அடையாளப் பயணமாகும்.
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து இளைஞர்களும் மை பாரத் போர்ட்டலில் (www.mybharat.gov.in) பதிவு செய்து, ஜனநாயகம், கண்ணியம் மற்றும் ஒற்றுமைக்கான இந்தப் பெருமைமிக்க அணிவகுப்பில் பங்கேற்க அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
****
SMB/DL
(Release ID: 2121230)
Visitor Counter : 20