மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
தொழில்நுட்பத்தால் செயல்படுத்தப்படும் தீவனத் தீர்வுகளை உருவாக்க வேண்டியது அவசியம் - மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங்
Posted On:
06 APR 2025 11:27AM by PIB Chennai
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், ஜான்சியில், இந்திய தொழில்துறை ஆராய்ச்சிக் கவுன்சிலின் கீழ் செயல்படும் இந்திய புல்வெளி - தீவன ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (ஐசிஏஆர்-ஐஜிஎஃப்ஆர்ஐ) நேற்று (ஏப்ரல் 5, 2025) சென்று, நாடு முழுவதும் தீவனம் கிடைப்பதை மேம்படுத்துதல், நிலையான புல்வெளி மேலாண்மை ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட தற்போதைய ஆராய்ச்சி முயற்சிகள் ஆய்வு செய்தார். கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை செயலாளர் திருமதி அல்கா உபாத்யாயா, கால்நடை பராமரிப்பு ஆணையர் டாக்டர் அபிஜித் மித்ரா ஆகியோருடன் இணைந்து மத்திய அமைச்சர், தீவன தொழில்நுட்பங்கள், சிறந்த நடைமுறைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்தார்.
அப்போது பேசிய திரு ராஜீவ் ரஞ்சன் சிங் , தற்போது 11 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ள தேசிய பசுந்தீவனப் பற்றாக்குறை குறித்து கவலை தெரிவித்ததுடன், இந்த சவாலை எதிர்கொள்ள தொழில்நுட்பம் சார்ந்த தலையீடுகளின் அவசியத்தை வலியுறுத்தினார். தற்போது 8.5 மில்லியன் ஹெக்டேர் மட்டுமே சாகுபடி செய்யப்படும் பசுந்தீவனம் என்றாலும், நாட்டில் சுமார் 11.5 மில்லியன் ஹெக்டேர் புல்வெளிகளும், கிட்டத்தட்ட 100 மில்லியன் ஹெக்டேர் தரிசு நிலங்களும் உள்ளன என்றார். அவை திறமையாக பயன்படுத்தப்படும்போது தீவன தற்சார்பை அடைய முடியும் என்று அவர் கூறினார்.
உயிரற்ற அழுத்தத்தைத் தாங்கும் வற்றாத புற்களின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். பயன்பாடற்ற நிலங்களுக்கு புத்துயிர் அளிப்பதிலும், சுற்றுச்சூழல் சமநிலைக்கு பங்களிப்பதிலும், ஆண்டு முழுவதும் நிலையான பசுந்தீவனத்தை வழங்குவதிலும் அவற்றின் திறனை எடுத்துரைத்தார். திறன் வாய்ந்த கால்நடைத் துறையை உருவாக்குவதில் அரசின் உறுதிப்பாட்டை வலியுறுத்திய திரு ராஜீவ் ரஞ்சன் சிங், அறிவியல், கண்டுபிடிப்பு, கூட்டுறவு நடைமுறை ஆகியவை தீவன பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் தற்சார்பை அடைவதற்கும் மைல்கற்களாக இருக்கும் என்று கூறினார்.
***
(Release ID: 2119477)
PLM/ RJ
(Release ID: 2119509)
Visitor Counter : 34