பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தாராளமாக கிடைப்பதை உறுதிசெய்ய அரசின் நடவடிக்கைகள்
இடுகை இடப்பட்ட நாள்:
03 APR 2025 3:12PM by PIB Chennai
நாடு முழுவதும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு வைப்பு தொகை இல்லாமல் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைப்பதை நோக்கமாகக் கொண்ட பிரதமரின் உஜ்வாலா திட்டம் 2016 மே மாதத்தில் தொடங்கப்பட்டது. 2019 டிசம்பரில் 8 கோடி இணைப்புகளை வழங்குவது என்ற இலக்கு எட்டப்பட்டது.
எஞ்சியுள்ள ஏழை குடும்பங்களுக்கும் இந்த வசதி கிடைப்பதற்கு 2021 ஆகஸ்ட் மாதத்தில் உஜ்வாலா 2.0 தொடங்கப்பட்டு கூடுதலாக 1 கோடி இணைப்புகளை விடுவிப்பது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கும் 2022 ஜனவரியில் எட்டப்பட்டது.
மேலும் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் கூடுதலாக 60 லட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விடுவிக்க அரசு முடிவு செய்தது. இத்துடன் 1.6 கோடி சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இணைப்பு என்ற இலக்கு 2022 டிசம்பரில் எட்டப்பட்டது.
2023-24 நிதியாண்டில் இருந்து 2025-26 நிதியாண்டு வரையிலான காலத்திற்கு பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கூடுதலாக 75 லட்சம் இணைப்புகளை விடுவிக்க அரசு ஒப்புதல் அளித்தது. ஆனால் இந்த இலக்கு 2024 ஜூலை மாதத்திலேயே எட்டப்பட்டுவிட்டது.
2025 மார்ச் 01 நிலவரப்படி இந்தியாவில் பிரதமரின் உஜ்வாலா திட்டப்பயனாளிகள் 10.33 கோடி பேர் உட்பட மொத்தம் 32.94 கோடி சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்பாட்டாளர்கள் உள்ளனர்.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இணையமைச்சர் திரு சுரேஷ் கோபி இன்று மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2118208
***
TS/SMB/AG/SG
(வெளியீட்டு அடையாள எண்: 2118350)
வருகையாளர் எண்ணிக்கை : 49