மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
மீன்பிடி நடைமுறைகளை ஊக்குவித்தல்
प्रविष्टि तिथि:
01 APR 2025 3:45PM by PIB Chennai
12 கடல் மைல் எல்லைக்குட்பட்ட கடல் பகுதியில் மீன்வளத்தை நிர்வகிப்பது மாநில அரசுகளின் அதிகாரத்தின் கீழ் வந்தாலும், பிரத்தியேகப் பொருளாதார மண்டலம் மற்றும் அதற்கு அப்பால் உள்ள மீன்வளம் மத்திய அரசின் பொறுப்பாகும். மத்திய அரசின் மீன்வளத் துறையால் அறிவிக்கப்பட்ட ‘கடல் மீன்பிடித் துறைக்கான தேசியக் கொள்கை- 2017 நாட்டில் கடல் வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதலை வழங்குகிறது. கடல் வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துவதற்காகச் செயல்படுத்தப்படும் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகளில் 61 நாட்கள் வருடாந்திர மீன்பிடித் தடை, அழிவுகரமான மீன்பிடி நடைமுறைகள் மீதான தடை ஆகியவையும் அடங்கும்.
மத்திய அரசின் மீன்வளத் துறை, சுற்றுச்சூழல் ரீதியாக ஆரோக்கியமான, பொருளாதார, சமூக ரீதியாக மீன்வளத் துறையின் தொலைநோக்குப் பார்வையுடன் பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது மீனவர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கூம் நல்வாழ்வுக்கும் முக்கிய பங்களிக்கிறது. இத்திட்டத்தின் கீழ், மீன் வளத்தை மேம்படுத்துவதற்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஆதரிப்பதற்கும் கடல் வளர்ப்பு மற்றும் செயற்கைப் பாறைகளை நிறுவுதல் போன்ற நடவடிக்கைகள் இந்திய கடற்கரைப் பகுதிகளில் முதல் முறையாக அரசால் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், கடற்கரை நீரில் மீன்பிடி அழுத்தத்தைக் குறைப்பதற்கும் கடல் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் கடற்பாசி வளர்ப்பு, திறந்தவெளி கூண்டு வளர்ப்பு, அலங்கார மீன்பிடித்தல் உள்ளிட்ட கடல்சார் நடவடிக்கைகளும் ஊக்குவிக்கப்படுகின்றன. நிலையான மீன்பிடி நடைமுறைகளை ஊக்குவிப்பதற்கும் அவ்வப்போது கடலோர மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
மீனவர்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக இத்திட்டத்தின் கீழ், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மீன்பிடி தடை காலகட்டங்களில் மீனவ குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் வாழ்வாதாரம் மற்றும் ஊட்டச்சத்து ஆதரவும் இதில் அடங்கும். மேலும், விபத்து காப்பீட்டுத் திட்ட காப்பீட்டுத் தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 32.16 லட்சம் மீனவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்தத் தகவலை மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியன் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2117262
***
TS/GK/AG/SG/DL
(रिलीज़ आईडी: 2117438)
आगंतुक पटल : 37