கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
சாகர்மாலா திட்டத்தின் முன்னேற்றம்
प्रविष्टि तिथि:
01 APR 2025 3:27PM by PIB Chennai
சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ .5.79 லட்சம் கோடி முதலீட்டில் 839 திட்டங்கள் செயல்படுத்த திட்டமிடப்பட்டு, அவற்றில், ரூ.1.41 லட்சம் கோடி மதிப்புள்ள 272 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளதாக மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால் கூறியுள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், 103 முடிக்கப்பட்ட திட்டங்கள், ஆண்டொன்றுக்கு 528 மில்லியன் டன்களுக்கும் மேலாக துறைமுகங்களின் நிறுவு திறனை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பதிலில் மேலும் கூறியிருப்பதாவது:
சாகர்மாலா திட்டம் என்பது இந்தியாவின் 7,500 கி.மீ நீளமுள்ள கடற்கரை, 14,500 கி.மீ பயணிக்கக்கூடிய நீர்வழிகள் மற்றும் முக்கிய சர்வதேச கடல் வர்த்தக பாதைகளில் முக்கிய இருப்பிடங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் நாட்டில் துறைமுகம் சார்ந்த வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் முதன்மைத் திட்டமாகும். சாகர்மாலா திட்டத்தின் கீழ், துறைமுக நவீனமயமாக்கல், துறைமுக இணைப்பு, துறைமுகம் சார்ந்த தொழில்மயமாக்கல், கடலோர சமூக மேம்பாடு மற்றும் கடலோர கப்பல் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு நீர் போக்குவரத்து ஆகிய ஐந்து முக்கிய அம்சங்களுடன் திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இத்திட்டங்கள் மத்திய அமைச்சகங்கள், இந்திய ரயில்வே, மாநில அரசு மற்றும் பெரிய துறைமுகங்கள் மூலம் செயல்படுத்தப்படுகின்றன.
கடலோர சமூக மேம்பாடு என்பது சாகர்மாலா திட்டத்தின் ஒரு பிரத்யேக அம்சமாகும். இது கடலோர சமுதாயத்தினரின் வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்துகிறது. சாகர்மாலா திட்டத்தின் கீழ், ஒடிசா, தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் உள்ள 21 கடலோர மாவட்டங்களில் விரிவான தொழில் திறன் இடைவெளி ஆய்வு நடத்தப்பட்டது. மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகமும் மாநில ஊரக வளர்ச்சி அமைச்சகமும், சாகர்மாலா ஒருங்கிணைப்புத் திட்டத்தின் கீழ் கடலோர மக்களுக்கும் திறன் மேம்பாட்டு வசதி அளிக்க மே 2017-ல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருந்தன. இந்த ஒருங்கிணைப்பின் முதல் கட்டம் 2016-2018-க்கு இடையில் ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது. 2079 நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அதில் 1243 நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.
***
(Release ID: 2117249)
TS/PKV/RR/SG
(रिलीज़ आईडी: 2117296)
आगंतुक पटल : 40