ஜல்சக்தி அமைச்சகம்
நாடாளுமன்றக் கேள்வி: உத்தரப்பிரதேசத்தில் வீடுதோறும் குழாய் வழிக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள்
இடுகை இடப்பட்ட நாள்:
27 MAR 2025 3:06PM by PIB Chennai
நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் போதுமான அளவில், பரிந்துரைக்கப்பட்ட தரத்தில், வழக்கமான மற்றும் நீண்ட கால அடிப்படையில் பாதுகாப்பான குடிநீர் வழங்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக, மத்திய அரசு ஜல் ஜீவன் இயக்கத்தைத் தொடங்கியது. இது 2019 ஆகஸ்ட் மாதம் முதல் உத்தரப்பிரதேசம் உட்பட ஏனைய மாநிலங்களுடன் கூட்டாகச் செயல்படுத்தப்படுகிறது. மத்திய அரசு மாநிலங்களுக்குத் தொழில்நுட்பம் மற்றும் நிதி உதவிகளை வழங்கி உதவுகிறது.
ஜல் ஜீவன் இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து, கிராமப்புற வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீருக்கான அணுகலை மேம்படுத்துவதை நோக்கி நாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 2019 ஆகஸ்ட் மாதம் ஜல் ஜீவன் இயக்கம் தொடக்கப்பட்டபோது3.23 கோடி (16.71%) கிராமப்புற வீடுகளில் மட்டுமே குடிநீர் குழாய் இணைப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதுவரை, 25.03.2025 நிலவரப்படி, சுமார் 12.31 கோடி கூடுதல் ஊரக வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, 25.03.2025 நிலவரப்படி, நாட்டில் உள்ள 19.36 கோடி கிராமப்புற வீடுகளில், தோராயமாக 15.54 கோடி (80.29%) வீடுகளில் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் வீடுதோறும் குழாய் வழிக் குடிநீர் திட்டத்தின் கீழ் கிராமங்களில் வழங்கப்பட்ட குழாய் இணைப்புகள் மற்றும் வீடுகளின் விவரங்கள் மற்றும் எண்ணிக்கை மாவட்ட வாரியாகவும் ஆண்டு வாரியாகவும் ஜே.ஜே.எம் ஐ.எம்.ஐ.எஸ் தகவல் தளத்தில் https://ejalshakti.gov.in/jjmreport/JJMIndia.aspx
கிடைக்கிறது.
அம்ருத் திட்டத்தின் கீழ், உத்தரப்பிரதேசத்தில் ரூ.4,267.71 கோடி மதிப்பீட்டில் எடுத்துக் கொள்ளப்பட்ட 170 நீர் வழங்கல் திட்டங்களில் ரூ.4,145.62 கோடி மதிப்புள்ள பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அம்ருத் & ஒருங்கிணைப்புத் திட்டத்தின் கீழ் 9.29 லட்சம் குடிநீர் குழாய் இணைப்புகள் புதிதாக மற்றும் புதுப்பிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு வி. சோமண்ணா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2115704
TS/PKV/SG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2115752)
வருகையாளர் எண்ணிக்கை : 60