ஜல்சக்தி அமைச்சகம்
தேசிய ஊரகக் குடிநீர் திட்டத்தின் கீழ் ஷெட்யூல்டு வகுப்பைச் சேர்ந்த குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்குதல்
Posted On:
24 MAR 2025 12:23PM by PIB Chennai
2019 ஆகஸ்ட் மாதம் முதல், மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஏற்கனவே நடைமுறையில் இருந்த வந்த தேசிய கிராமப்புறக் குடிநீர் திட்டத்துடன் இணைத்து, குழாய் வழிக் குடிநீர் வழங்கும் வகையில் ஜல் ஜீவன் இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது. நாள் ஒன்றுக்கு தலா ஒரு நபருக்கு 55 லிட்டர் வீதம் சுத்தமான குடிநீர் வழங்க இத்திட்டம் வகை செய்கிறது. ஷெட்யூல்டு வகுப்பைச் சேர்ந்த மக்கள் உட்பட நாட்டின் ஒவ்வொரு கிராமப்புற குடும்பத்திற்கும் நீண்ட கால அடிப்படையில் பாதுகாப்பான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்திட்டம் கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்களுக்கு தூய்மையான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்கிறது.. மேலும், இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி, கிராமப்புறங்களில் உள்ள 10% ஷெட்யூல்டு வகுப்பினர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் அவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலும், இத்திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. மாநிலங்களால் தெரிவிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 17.3.2025 அன்றுள்ளபடி ஷெட்யூல்டு மக்கள் அதிகமாக வசிக்கும் கிராமப்பகுதிகளில் உள்ள 215.75 லட்சம் குடும்பங்களில் 172.86 லட்சம் குடும்பங்களுக்கு(80.12%) குழாய் வழிக் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டத்தின் கீழ் ஆண்டு தோறும் வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டில் 22% ஷெட்யூல்டு வகுப்பினருக்கான துணைத் திட்டத்திற்கு வழங்கப்படுகிறது.
நீர் மாநில அரசின் வரம்பிற்குள் உள்ளதால், குடிநீர் வழங்கும் திட்டங்களை செயல்படுத்துதல், இயக்குதல் மற்றும் பராமரித்தல் ஆகியவை மாநில / யூனியன் பிரதேச அரசுகளின் பொறுப்பாகும். அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் வழங்கப்படும் நீரின் அளவு, தரம் உட்பட வழங்கப்பட்டு வரும் குடிநீர் இணைப்புகளின் செயல்பாட்டை உறுதி செய்ய மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் பல ஆய்வுக் கூட்டங்கள், கள ஆய்வுகள் போன்றவற்றின் மூலம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளன.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு. வி. சோமண்ணா இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2114293
**
TS/SV/KPG/KR/DL
(Release ID: 2114534)