ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாட்டில் ஊரகப் பகுதி வீடுகளில் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் குடிநீரின் தரம்

Posted On: 24 MAR 2025 12:13PM by PIB Chennai

ஜல் ஜீவன் இயக்கம் – இல்லந்தோறும் குடிநீர், 2019 ஆகஸ்ட் முதல், மாநிலங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. இது ஊரகப் பகுதி வீடுகளுக்குப் போதுமான அளவில், பரிந்துரைக்கப்பட்ட தரத்தில் மற்றும் வழக்கமான மற்றும் நீண்ட கால அடிப்படையில் குடிநீர் வழங்குவதற்காகச் செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்கி  வருகிறது. ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ், தற்போதுள்ள வழிகாட்டுதல்களின்படி, இந்தியத் தர நிர்ணய அமைவனத்தின் பிஐஎஸ்: 10500 தரநிலைகள், குழாய் மூலம் குடிநீர் வழங்கல் திட்டங்கள் மூலம் வழங்கப்படும் நீரின் தரத்திற்கான அளவுகோலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. குடிநீர் மாநில பட்டியலில் இருப்பதால், ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் உள்ள செயல்பாடுகள்  உட்பட குடிநீர் வழங்கல் திட்டங்களின் திட்டமிடல், ஒப்புதல், செயல்படுத்துதல், இயக்கம் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றின் பொறுப்பு மாநில / யூனியன் பிரதேச அரசுகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

செயல்பாட்டு வழிகாட்டுதல்களின்படி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள், நீர் தரக் கண்காணிப்பு மற்றும் கூர்கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் ஆண்டு ஒதுக்கீட்டில் 2% வரை பயன்படுத்தலாம். மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் நீரின் தரத்திற்கான நீர் மாதிரிகளைச் சோதித்தல், குடிநீர்  மாதிரி சேகரிப்பு, அறிக்கை அளித்தல், கண்காணித்தல் மற்றும் கூர்கண்காணிப்பு ஆகியவற்றுக்காகஆன்லைன் ஜே.ஜே.எம் – நீர் தர மேலாண்மை தகவல் அமைப்பு போர்ட்டல் உருவாக்கப்பட்டுள்ளது. நீர் தர மேலாண்மை முறை மூலம் தெரிவிக்கப்பட்ட மாநில வாரியான நீர் தர சோதனை விவரங்கள் ஜல் ஜீவன் இயக்கத்தின் இணைய தளத்தில் காணலாம். மேலும் அவற்றை பின்வரும் முகவரியிலும் அணுகலாம்:  https://ejalshakti.gov.in/WQMIS/Main/report நீரின் தரத்தை கண்காணிக்க சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், கிராம அளவில் கள பரிசோதனைக் கருவிகளைப் பயன்படுத்தி  நீர் தர சோதனையை நடத்த ஒவ்வொரு கிராமத்திலும் 5 நபர்களை, முக்கியமாகப் பெண்களை அடையாளம் கண்டு பயிற்சி அளிக்கவும், அதை நீர் தர மேலாண்மை தகவல் அமைப்பின் இணையதளத்தில் தெரிவிக்கவும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதுவரை, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களால் தெரிவிக்கப்பட்டபடி, தற்போது வரை, 24.81 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு (தமிழ்நாட்டில் 62,898 பேர் உட்பட) கள பரிசோதனை கருவிகளைப் பயன்படுத்தி தண்ணீரைப் பரிசோதனை செய்ய பயிற்சி பெற்றுள்ளனர்.

மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் தெரிவித்துள்ளபடி, தற்போது வரை 2,182 குடிநீர் தர பரிசோதனை ஆய்வகங்கள் (தமிழ்நாட்டில் 113 உட்பட) பல்வேறு நிலைகளில் உள்ளன.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் நீர்வளத் துறை இணையமைச்சர் திரு. வி. சோமண்ணா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***

(Release ID: 2114281)
TS/IR/RR/KR

 


(Release ID: 2114338) Visitor Counter : 27


Read this release in: English , Urdu