பாதுகாப்பு அமைச்சகம்
ஜிஎஸ்எல் நிறுவனத்தால் கட்டப்பட்ட 1135.6 திட்ட இரண்டாவது போர்க்கப்பல் அறிமுகம் செய்யப்பட்டது
இது இந்தியாவின் தொழில்நுட்பத் திறன்களையும், தற்சார்பு உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது - பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத்
Posted On:
22 MAR 2025 5:34PM by PIB Chennai
கோவா ஷிப்யார்ட் லிமிடெட் (ஜிஎஸ்எல்) கட்டிய 'தவஸ்யா' என்று பெயரிடப்பட்ட திட்டம் 1135.6 கூடுதல் வரிசைக் கப்பல்களின் இரண்டாவது போர்க்கப்பல், பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் முன்னிலையில் இன்று (மார்ச் 22, 2025) அன்று கோவாவில் உள்ள ஜிஎஸ்எல் தளத்தில் அறிமுகம் செய்து பயன்பாட்டுக்குத் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த போர்க்கப்பல்கள் பி1135.6 கப்பல்களின் தொடர் வரிசையாகும். இவை இப்போது இந்திய கப்பல் கட்டும் தளத்தில் உள்நாட்டிலேயே கட்டப்பட்டு வருகின்றன.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பாதுகாப்புத் துறை இணையமைச்சர், இந்திய கடற்படையின் வளர்ந்து வரும் தற்சார்பு குறித்துப் பேசினார். இந்த அறிமுகம் இந்தியாவின் கடற்படை வரலாற்றில் ஒரு முக்கிய தருணம் என்று அவர் கூறினார். இது நமது தொழில்நுட்பத் திறன்களையும், தற்சார்புக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
பிரமோஸ் ஏவுகணை அமைப்பு, டார்பிடோ லாஞ்சர்கள், சோனார், துணை கட்டுப்பாட்டு அமைப்புகள் போன்ற முக்கியமான பாகங்களின் வெற்றிகரமான உள்ளூர்மயமாக்கல் இந்தியாவின் கப்பல் கட்டும் சூழல் அமைப்பின் வளர்ந்து வரும் வலுவான தன்மையை நிரூபிக்கிறது என்று பாதுகாப்புத் துறை இணையமைச்சர் எடுத்துரைத்தார். தவஸ்யா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்திய கடற்படைக்கு ஒரு படி மட்டுமல்லாமல், இந்தியாவின் உத்திசார் பாதுகாப்பு எதிர்பார்ப்புகளில் ஒரு பெரிய முன்னேற்றம் என்று அவர் மேலும் கூறினார்.
இந்திய கடற்படையின் வலுவான உணர்வும் வளர்ந்து வரும் வலிமையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், 'மகாபாரதத்தின்' புகழ்பெற்ற வீரரான 'பீமா'வின் கதாயுதத்தின் நினைவாக இந்த கப்பலுக்கு 'தவஸ்யா' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இரண்டு ப்ராஜெக்ட் 1135.6 வரிசை போர்க்கப்பல்களைக் கட்டுவதற்கான ஒப்பந்தம் பாதுகாப்பு அமைச்சகத்துக்கும் கோவா ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்துக்கும் இடையே 25 ஜனவரி 2019 அன்று கையெழுத்தானது. முதல் கப்பல் 'டிரிபுட்' 23 ஜூலை 2024 அன்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கப்பல்கள் தரை, கடலுக்கு அடியில், வான்வழி போர் நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. 'திரிபுத்', 'தவஸ்யா' ஆகியவை 124.8 மீட்டர் நீளமும் 15.2 மீட்டர் அகலமும் கொண்டவை.
'திரிபுத்', 'தவாஸ்யா' ஆகியவை உள்நாட்டு மூல உபகரணங்கள், ஆயுதங்கள், சென்சார்களில் அதிக சதவீதத்தைக் கொண்டுள்ளன. இது இந்திய உற்பத்தி பிரிவுகளால் பெரிய அளவிலான பாதுகாப்பு உற்பத்தியை உறுதி செய்கிறது. இது நாட்டிற்குள் வேலைவாய்ப்பையும் திறன் மேம்பாட்டையும் ஊக்குவிக்கிறது. இந்த கப்பல்களில் மேம்பட்ட அம்சங்கள், மேம்பட்ட ஆயுதம், சென்சார்கள், சிறந்த இயங்குதள மேலாண்மை அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.
***
PLM/KV
(Release ID: 2114041)
Visitor Counter : 46