இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆன்டிகுவா - பார்புடாவின் வெளியுறவு, வர்த்தக அமைச்சர் திரு சேட் கிரீன் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியாவை சந்தித்தார்

Posted On: 22 MAR 2025 5:15PM by PIB Chennai


 

ஆன்டிகுவா - பார்புடாவின் வெளியுறவு, வர்த்தகம், பார்புடா விவகாரங்கள் துறை அமைச்சர் திரு சேட் கிரீன், இந்தியா வந்துள்ள நிலையில், மத்திய இளைஞர் நலன், விளையாட்டு, தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியாவை ஷ்ரம் சக்தி பவனில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (21.03.2025) சந்தித்தார்.

இந்தியாவுக்கும் ஆன்டிகுவா - பார்புடாவுக்கும் இடையேயான வரலாற்று உறவுகளை இரு தரப்பினரும் எடுத்துரைத்தனர். கிரிக்கெட், கால்பந்து, ரக்பி, கூடைப்பந்து, கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் ஒத்துழைப்புக்கான வழிகள் குறித்து இந்த சந்திப்பில் ஆராயப்பட்டது. பலதரப்பு மன்றங்களில் பரஸ்பர ஆதரவு, ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் ஆன்டிகுவா தூதுக்குழு மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தியது.

விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்களுக்கான பரிமாற்ற திட்டங்கள், விளையாட்டு அறிவியல், விளையாட்டு மருத்துவம், விளையாட்டு மேலாண்மை, விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாடு போன்றவை குறித்தும் இந்த சந்திப்பில் பேசப்பட்டது.  ஆன்டிகுவான் தரப்பு தங்கள் தேசிய கிரிக்கெட் அணியை வலுப்படுத்தும் நோக்கில், தங்கள் நாட்டில் கிரிக்கெட் வசதிகளை மேம்படுத்த இந்திய உதவியை நாடியது. மேலும், ஆன்டிகுவா - பார்புடா கிரிக்கெட் ஜாம்பவான்களை இந்தியாவில் உள்ள அகாடமிகளில் பயிற்சியில் ஈடுபடுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

திரு சேட் கிரீன், கொவிட்-19 தொற்றுநோயின் போது தடுப்பூசி உதவி மூலம் இந்தியா ஆதரவு அளித்ததைப் பாராட்டினார். உலகளாவிய தெற்கு நாடுகளின் பிரச்சினைகள், பொருளாதார வளர்ச்சி, சுகாதாரம், டிஜிட்டல் முன்னேற்றம் ஆகியவற்றை முன்னெடுப்பதில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையை அவர் பாராட்டினார்.

விளையாட்டில் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு மூலம் மக்களுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்த வேண்டும் என்று இருதரப்பும் வலியுறுத்தின.

***

PLM/KV

 


(Release ID: 2114030) Visitor Counter : 33


Read this release in: English , Urdu , Hindi , Gujarati