வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டம் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி, ஏற்றுமதியை அதிகரிக்கிறது

Posted On: 22 MAR 2025 4:10PM by PIB Chennai

 

தற்சார்புடைய நாடாக மாறுவதற்கான இந்தியாவின் பார்வையைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் உற்பத்தி திறன்களையும் ஏற்றுமதியையும் மேம்படுத்துவதற்காக 14 முக்கிய துறைகளுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களின் தாக்கம் இந்தியாவில் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இந்த திட்டங்கள் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து, உற்பத்தியை அதிகரித்து, வேலை உருவாக்கத்தையும் ஏற்றுமதியையும் அதிகரிக்க வழிவகுத்துள்ளன. அவை உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து குறிப்பிடத்தக்க முதலீடுகளையும் ஈர்த்துள்ளன.

இப்போதுவரை, 14 முக்கிய துறைகளுக்கான பிஎல்ஐ திட்டங்களின் கீழ் 764 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மருந்துகள், மருத்துவ சாதனங்கள், மருந்து, தொலைத்தொடர்பு, உணவு பதப்படுத்துதல், ஜவுளி போன்ற துறைகளில் பிஎல்ஐ பயனாளிகளில் 176 குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன.

நவம்பர் 2024 வரை சுமார் 1.61 லட்சம் கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது. இது 11.5 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளையும் சுமார் 14 லட்சம் கோடி உற்பத்தி/விற்பனையையும் உருவாக்கியுள்ளது.

பெரிய அளவிலான மின்னணு உற்பத்தி, தகவல் தொழில்நுட்ப வன்பொருள், மருந்துகள், மருத்துவ சாதனங்கள்,தொலைத்தொடர்பு, வாகன பாகங்கள் போன்ற 10 துறைகளுக்கு பிஎல்ஐ திட்டங்களின் கீழ் சுமார் 14020 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பு எஃகுக்கான பிஎல்ஐ திட்டத்தில், சுமார் 20,000 கோடியை நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. மேலும் இந்த திட்டங்கள் 9000 நேரடி வேலைவாய்ப்பை அளித்துள்ளன. இத்தொழில்துறைக்கு இதுவரை 48 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

உணவு பதப்படுத்தும் தொழிலுக்கான பிஎல்ஐ திட்டத்தின் கீழ், 2022-23-ல் 474 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

உணவு பதப்படுத்தும் தொழிலுக்கான பிஎல்ஐ திட்டம் தற்போது அனைத்து பிரிவுகளிலும் 171 செயலில் உள்ள பயனாளி நிறுவனங்களைக் கொண்டுள்ளது.

இந்தியாவின் மின்னணு உற்பத்தித் துறை பிஎல்ஐ திட்டத்தின் கீழ் செழித்தோங்கியுள்ளது. நிகர இறக்குமதியாளர் என்பதிலிருந்து மொபைல் போன்களின் நிகர ஏற்றுமதியாளராக இந்தியா மாறியுள்ளது.

உலகளாவிய மருந்து சந்தையில் இந்தியாவின் நிலை விரிவடைந்துள்ளது. அளவின் அடிப்படையில் மூன்றாவது பெரிய நாடாக உள்ளது. ஏற்றுமதி இப்போது உற்பத்தியில் 50% ஆகும். மேலும் பென்சிலின் ஜி போன்ற முக்கிய மொத்த மருந்துகளை உற்பத்தி செய்வதன் மூலம் இறக்குமதியை நம்பியிருப்பதை நாடு குறைத்துள்ளது.

பிஎல்ஐ திட்டங்களின் நோக்கம் முக்கிய துறைகள், அதிநவீன தொழில்நுட்பத்தில் முதலீடுகளை ஈர்ப்பதாகும். உற்பத்தித் துறையில் செயல்திறனை உறுதி செய்தல், பொருளாதாரத்தை மேம்படுத்துதல், இந்திய நிறுவனங்களை உலகளவில் போட்டியிடச் செய்தல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டங்கள் உற்பத்தியை கணிசமாக அதிகரித்து அடுத்த ஐந்து ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் திறனைக் கொண்டுள்ளன.

***

PLM/KV

 


(Release ID: 2114024) Visitor Counter : 48


Read this release in: English , Urdu , Hindi