ஜவுளித்துறை அமைச்சகம்
நாடாளுமன்றக் கேள்வி: ஜவுளித் துறையில் வேலைவாய்ப்பு உருவாக்கம்
Posted On:
21 MAR 2025 12:16PM by PIB Chennai
நாட்டில் அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் துறைகளில் ஒன்றாக ஜவுளித்துறை திகழ்கிறது. இதன் மூலம் 45 லட்சத்திற்கும் அதிகமானோர் நேரடியாக வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். ஜவுளித் துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பிரதமரின் மாபெரும் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலங்கள் மற்றும் ஆயத்த ஆடை (பிஎம் மித்ரா) பூங்காக்கள் திட்டம் நவீன, ஒருங்கிணைந்த பெரிய அளவிலான, உலகத்தரம் வாய்ந்த தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க வகைசெய்கிறது. இது முதலீடுகளை ஈர்ப்பதற்கும், வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கும் உதவும்;
உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டமானது
பெரிய அளவிலான உற்பத்தியை ஊக்குவித்து, போட்டித்தன்மையை அதிகரிப்பதன் மூலம் செயற்கை இழை & ஆயத்த ஆடை மற்றும் தொழில்நுட்ப ஜவுளி ஆகியவற்றில் கவனம் செலுத்த உதவும். தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கமானது ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, மேம்பாடு, சந்தைப்படுத்துதல் திறன் மேம்பாடு, ஏற்றுமதி ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்த உதவுகிறது. சமர்த் திட்டமானது தேவை அடிப்படையில் வேலைவாய்ப்பு அடிப்படையில் திறன் மேம்பாட்டு செயல் திட்டங்களை வழங்கும். திருத்தப்பட்ட தொழில்நுட்ப தரநிலை உயர்த்தலுக்கான நிதியத் திட்டம் ஜவுளித் துறையில் திறன் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு, நவீனமயமாக்கல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், மூலதன முதலீட்டு மானியம் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும். பட்டு சமக்ரா-2 திட்டத்தில் பட்டு வளர்ச்சிக்கான மதிப்புச் சங்கிலி மற்றும் தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்டவை அடங்கும்.
ஜவுளித்துறையின் ஒட்டுமொத்த மதிப்புச் சங்கிலிக்கும் ஒருங்கிணைந்த பெரிய அளவிலான, நவீன தொழில்துறை உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க, தமிழ்நாடு (விருதுநகர்), தெலங்கானா (வாரங்கல்), குஜராத் (நவ்சாரி), கர்நாடகா (கலபுராகி), மத்தியப் பிரதேசம் (தார்), உத்தரப் பிரதேசம் (லக்னோ) மற்றும் மகாராஷ்டிரா (அமராவதி) ஆகிய 7 இடங்களில் பிரதமரின் மித்ரா திட்டத்தின் கீழ் ஜவுளி பூங்காக்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தப் பூங்காக்கள் ஜவுளித் துறையை உலக அளவில் போட்டியிடக்கூடிய தன்மையை பெறவும், அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்கும், மகளிர் மற்றும் விளிம்புநிலையில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஜவுளித்துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கெரிட்டா இதனைத் தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 2113534)
TS/SV/AG/RR
(Release ID: 2113593)
Visitor Counter : 36