நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மின்சார தேவையைப் பூர்த்தி செய்ய நிலக்கரி விநியோகம் மற்றும் சரக்கு போக்குவரத்து நடைமுறைகள்

Posted On: 17 MAR 2025 3:36PM by PIB Chennai

நாட்டில் போதுமான அளவு நிலக்கரி கிடைத்து வருகிறது. நாட்டின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதில் மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. 2023-24 ஆம் ஆண்டில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நிலக்கரி உற்பத்தியில் நாடு சாதனை படைத்துள்ளது. 2023-2024-ம் ஆண்டில் அகில இந்திய உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி 997.826 மில்லியன் டன்னாக இருந்தது. இது 2022-2023-ம் ஆண்டில் 893.191 மில்லியன் டன்னாக இருந்தது, இது சுமார் 11.71 சதவீத வளர்ச்சியைக் குறிக்கிறது.

நடப்பு நிதியாண்டில், நாடு 929.15 மில்லியன் டன் நிலக்கரியை (பிப்ரவரி மாதம் வரை) உற்பத்தி செய்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 881.16 மில்லியன் டன்னாக இருந்தது, இது 5.45 சதவீத வளர்ச்சியைக் குறிப்பதாக உள்ளது.

2025-26-ம் நிதியாண்டில் உள்நாட்டு நிலக்கரி தேவை 906.1 மில்லியன் டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய மின்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு மத்திய நிலக்கரி அமைச்சகம் 2025-26-ம் நிதியாண்டில் 906.1 மில்லியன் டன் உள்நாட்டு நிலக்கரி விநியோகத் திட்டத்தை மின்சாரத் துறைக்கு அனுப்பியுள்ளது.

மத்திய மின்சார ஆணையத்தின் அறிக்கையின்படி, உள்நாட்டு நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு 10.03.2025-ம் தேதி நிலவரப்படி 53.49 மில்லியன் டன்னாக உள்ளது. இது கடந்த 2023-24-ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 44.51 மில்லியன் டன்னாக இருந்தது. இது 20.20% வளர்ச்சி விகிதத்துடன் உள்ளது. தற்போது நிலக்கரி கையிருப்பு 85 சதவீதம் என்ற அளவில் 20 நாள் மின் உற்பத்திக்கு போதுமானதாக உள்ளது.

மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி வழங்குவது ஒரு தொடர்ச்சியான நடைமுறையாகும். நிலக்கரி நிறுவனங்களால் நிலக்கரி விநியோகம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், மத்திய மின்சார அமைச்சகம், நிலக்கரி அமைச்சகம், ரயில்வே அமைச்சகம், மத்திய மின்சார ஆணையம், கோல் இந்தியா நிறுவனம் மற்றும் சிங்கரேனி நிலக்கரி கம்பெனி நிறுவனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய துணைக் குழுவும் நிலக்கரி விநியோகத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அனல்மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி விநியோகத்தை அதிகரிப்பதற்கான பல்வேறு செயல்பாடுகள் தொடர்பான நடவடிக்கைகளை இந்த அதிகாரிகள் முடிவு செய்து வருகின்றனர்.

இது தவிர, ரயில்வே வாரியத் தலைவரை உள்ளடக்கிய அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு. ஜி. கிஷன் ரெட்டி இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2111791

***

TS/SV/RJ/KR/DL


(Release ID: 2111949) Visitor Counter : 17


Read this release in: English , Urdu , Hindi