சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் முதல் துரப்பண உரிம ஏலம் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் கனிம இலக்கு ஹேக்கத்தான் கோவாவில் தொடங்கப்பட்டது

Posted On: 13 MAR 2025 5:33PM by PIB Chennai

மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் அமைச்சர் திரு. ஜி. கிஷன் ரெட்டி மற்றும் கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த் ஆகியோர் கலந்து கொண்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுக்கு மத்திய சுரங்க அமைச்சகம், கோவா அரசுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

 இந்தியாவின் முதல் துரப்பண உரிமங்களின் முதல் ஏலத்தைத் தொடங்கி வைக்கும் நிகழ்வாக இது இருந்தது. இது நாட்டின் பயன்படுத்தப்படாத முக்கியமான மற்றும் ஆழமாக வேரூன்றியுள்ள கனிம வளங்களை கண்டறிந்து தோண்டி எடுப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க சீர்திருத்த செயல்பாடாகும். இந்த நிகழ்ச்சியில் முக்கியமான கனிம தொகுதிகளின் ஏலத்தின் 5-வது தவணை மற்றும் செயற்கை நுண்ணறிவு கனிம இலக்கு ஹேக்கத்தான் 2025-ன் தொடக்க விழா ஆகியவை இடம்பெற்றன‌‌.

மத்திய அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி மற்றும் கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த் ஆகியோர் கூட்டாக அரிய பூமி தனிமங்கள், துத்தநாகம், வைரம், தாமிரம் மற்றும் பிளாட்டினம் குழு கனிமங்கள் போன்ற முக்கியமான தாதுக்களை உள்ளடக்கிய 13 துரப்பண உரிமத் தொகுதிகளின் ஏலத்தை தொடங்கி வைத்தனர். வெளிப்படையான ஆன்லைன் ஏல செயல்முறை மூலம் எளிதாக்கப்பட்ட இந்த முயற்சி, முறையான கனிம ஆய்வை விரைவுபடுத்தவும், தனியார் துறையின் பங்களிப்பை அதிகரிக்கவும், இறக்குமதி சார்புநிலையைக் குறைக்கவும் பயன்படும்.

இந்தத் தருணத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த திரு ஜி கிஷன் ரெட்டி, "முதல் முறையாக, கட்டமைக்கப்பட்ட மற்றும் வெளிப்படையான ஏல செயல்முறை மூலம் முறையான ஆரம்ப கட்ட ஆய்வை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்த சீர்திருத்தம் முக்கியமான மற்றும் ஆழத்தில் இருக்கும் தாதுக்களின் கண்டுபிடிப்பை துரிதப்படுத்தும். முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும். மேலும் இந்தியாவின் தூய்மையான எரிசக்தி மற்றும் தொழில்துறை விருப்பங்களுடன் இணைந்த தன்னம்பிக்கை, எதிர்காலத்திற்கு தயாராக உள்ள கனிம சுற்றுச்சூழல் அமைப்புக்கு வழி வகுக்கும்” என்று கூறினார்.

கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த், இந்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளைப் பாராட்டினார், "கோவா ஒரு வளமான சுரங்க பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. மேலும் பொறுப்பான, தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் கனிம வளர்ச்சிக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இந்த சீர்திருத்தங்கள் இந்தியாவின் கனிம வளத்தைத் திறப்பது மட்டுமல்லாமல், நிலையான சுரங்கத்திற்கான புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும் என்றார்.

கனிம தற்சார்பை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் இந்த ஏலம் முக்கிய அடி எடுத்து வைக்கிறது என்று சுரங்க அமைச்சகத்தின் செயலாளர் திரு வி.எல்.காந்த ராவ் வலியுறுத்தினார்.

"செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி கனிம இலக்கு" குறித்த ஹேக்கத்தான் மத்திய அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி மற்றும் முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த் ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது. புதிய கனிம வளம் நிறைந்த மண்டலங்களை, குறிப்பாக மறைக்கப்பட்ட மற்றும் ஆழமான வளங்களை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவு-உந்துதல் நுட்பங்கள் மற்றும் புவி அறிவியல் தரவுகளைப் பயன்படுத்துவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

பங்கேற்பாளர்கள் புவி இயற்பியல், புவி வேதியியல், தொலை உணர்வு போன்ற தரவுத்தொகுப்புகளைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்குவார்கள், தாமிரம் போன்ற முக்கியமான தாதுக்களில் கவனம் செலுத்துவார்கள். இந்த ஹேக்கத்தான் இந்தியாவின் துரப்பண சூழல் அமைப்பில் புதுமைகளை ஊக்குவிப்பதுடன், தரவு சார்ந்த கனிம கண்டுபிடிப்பை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கனிம ஆய்வில் தனியார் பங்களிப்பை மேலும் ஊக்குவிக்கும் வகையில், மத்திய அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி மற்றும் முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த் ஆகியோர் புதிதாக அறிவிக்கப்பட்ட மூன்று தனியார் ஆய்வு முகமைகளுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.

***

TS/PKV/RR/KR/DL


(Release ID: 2111282) Visitor Counter : 16


Read this release in: English , Urdu , Hindi , Marathi