உள்துறை அமைச்சகம்
ஜெர்மனியின் மியூனிக்கில் நடைபெற்ற பயங்கரவாத செயல்களுக்கு நிதி வழங்குவதைத் தடுத்தல் குறித்த மாநாடு
Posted On:
12 MAR 2025 4:18PM by PIB Chennai
ஜெர்மனியின் மியூனிக்கில் நடைபெற்ற பயங்கரவாத செயல்களுக்கு நிதி வழங்குவதைத் தடுப்பது குறித்த 4-வது மாநாட்டின் போது, பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை இந்தியா வலியுறுத்தியுள்ளது. பயங்கரவாதச் செயல்களைத் தடுப்பதில் உலக நாடுகளுடன் ஒன்றிணைந்து செயல்பட இந்தியா உறுதியுடன் உள்ளது.
புதிய டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி, நிதி பரிவர்த்தனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதற்கான செயல்பாடுகள் அதிகரித்து வருவதாகவும், பயங்கரவாதிகள் சொத்துக்களை கொண்டு செல்லும் வழிமுறைகளை கண்டறிவது மிகவும் சிக்கலானதாக மாறி வருவதாகவும், உலகளாவிய பாதுகாப்புக்கு அவை குறிப்பிடத்தக்க அளவில் அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதாகவும் உள்ளது என்றும் இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி கிடைப்பதில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில், தகவல்களை சேகரித்து, ஒருங்கிணைத்து, உடனுக்குடன் பகிர்ந்துகொள்வதற்கான நுண்ணறிவு அமைப்பை மத்திய அரசு வலுப்படுத்தியுள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டம், 2002, பயங்கரவாத நிதி மற்றும் கள்ள நோட்டு பிரிவு, சைபர் பயங்கரவாதம் தொடர்பான மூன்று புதிய பிரிவுகளில் உரிய திருத்தங்கள் ஆகியவற்றின் மூலம் சட்டத்தின் நிர்வாக நடைமுறைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத நிதியுதவி, கள்ள நோட்டு தொடர்பான வழக்குகளில் வெடிபொருள், தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள், மனித கடத்தல் குறித்தும் விசாரணை நடத்தும் வகையில் தேசிய புலனாய்வு முகமை கவனம் செலுத்தி வருகிறது. நாட்டில் கள்ள நோட்டுகளின் புழக்கத்தைத் தடுக்க மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளிடையே உளவுத்துறை உள்ளீடுகள், தகவல்களைப் பகிர்ந்து கொள்ள உள்துறை அமைச்சகத்தால் போலி இந்திய ரூபாய் நோட்டு ஒருங்கிணைப்பு மையம் (எஃப்.சி.ஏ.ஆர்.டி) அமைக்கப்பட்டுள்ளது.
நிதிசார் சூழல் அமைப்புக்கான ஒழுங்குமுறை அம்சங்களை இந்திய ரிசர்வ் வங்கி கவனித்து வருகிறது.
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்ட (ஆவணங்கள் பராமரிப்பு) விதிகள், 2005, மத்திய நிதி புலனாய்வு பிரிவின் இயக்குநருக்கு, சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை ஆணையத்துடன் கலந்தாலோசித்து சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளைக் கண்டறிந்து தெரிவிக்க அதிகாரம் அளிக்கிறது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணை அமைச்சர் திரு நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்துள்ளார்.
***
TS/SV/AG/DL
(Release ID: 2110990)
Visitor Counter : 11