மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
விலங்குகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள் குறித்த இணையவழி விழிப்புணர்வு நிகழ்ச்சி - ஒரு லட்சத்துக்கும் அதிகமான பெண் கால்நடை விவசாயிகள் பங்கேற்பு
Posted On:
08 MAR 2025 10:44AM by PIB Chennai
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கால்நடை பராமரிப்பு - பால்வளத் துறை, பொது சேவை மையங்கள் (சிஎஸ்சி) கட்டமைப்பின் மூலம் விலங்கினங்களால் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக ஒரு இணையவழி மெய்நிகர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கிராம அளவிலான தொழில்முனைவோர் ஏற்பாடு செய்த சுமார் 2050 முகாம்களைச் சேர்ந்தோர் மெய்நிகர் முறையில் இதில் இணைந்தனர். இந்த அமர்வுக்கு கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை செயலாளர் திருமதி அல்கா உபாத்யாயா தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியின் போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடை பெண் விவசாய பங்கேற்பாளர்களுக்கு பல்வேறு விலங்கின நோய்கள், சுத்தமான பால் உற்பத்தி, நோய் தடுப்பில் பாரம்பரிய கால்நடை மருந்துகளின் பங்கு பற்றிய தகவல்கள், நிபுணர்களாலும் கால்நடை மருத்துவர்களாலும் வழங்கப்பட்டன.
இந்த அமர்வின் போது, செயலாளர் திருமதி அல்கா உபாத்யாயா பெண் கால்நடை வளர்ப்பாளர்கள், பால் பண்ணையாளர்களுடன் கலந்துரையாடி, அவர்களது கால்நடைகளின் ஆரோக்கியம், தடுப்பூசி நிலை போன்றவற்றை கேட்டறிந்தார். பால் கூட்டுறவு சங்கங்களில் பெண்கள் வகிக்கும் குறிப்பிடத்தக்க பங்கை செயலாளர் குறிப்பிட்டார். மேலும் அவர்களின் கூட்டு முயற்சிகள் அதிக கடன் வசதியை உறுதி செய்துள்ளன என்றும் வாடிக்கையாளர்கள் தளத்தை பன்மடங்கு விரிவுபடுத்தியுள்ளன என்றும் கூறினார். பால் கூட்டுறவு சங்கங்கள் இல்லாத இடங்களில் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், சமூக தொடர்புடைய விவசாயிகள், சுய உதவிக் குழுக்கள் ஆகியவற்றின் மூலம் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்ட பெண் பால் உற்பத்தியாளர்களின் விடாமுயற்சி குறிப்பிடத்தக்கது என்று அவர் மேலும் கூறினார். பால்வளத் துறையில் பெண்களின் பங்களிப்பு மிகப்பெரியது என்றும், இந்தத் துறையில் மத்திய அரசின் திட்டங்களின் பலன்களைப் பெறுவதில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் திருமதி உபாத்யாயா கூறினார். வெள்ளாடு, செம்மறியாடு வளர்ப்புத் திட்டங்கள், பெண் விவசாயிகள் குறைந்த செலவில் நல்ல வருமானத்தைப் பெற உதவும் என்று அவர் எடுத்துரைத்தார். விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு நோய் பரவலைத் தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் கூறினார்.
கால்நடைப் பராபரிப்புத் துறையின் கூடுதல் செயலாளர் திருமதி வர்ஷா ஜோஷி, பெண் விவசாயிகளுடன் நடத்திய கலந்துரையாடலில், கால்நடை பராமரிப்பு நடைமுறைகளுக்கும் பொது சுகாதாரத்திற்கும் இடையேயான தொடர்பு குறித்து பேசினார். இந்தத் துறையில் சுகாதாரமான, நிலையான நடைமுறைகளின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். மேலும் தூய பால் உற்பத்தியின் முக்கியத்துவத்தையும், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு நோய்கள் பரவுவதைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அவர் விளக்கினார்.
***
PLM/DL
(Release ID: 2109357)