தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
இந்தியாவில் பெண் பணியாளர்களின் பங்கேற்பை அதிகரிப்பது குறித்த வட்டமேசை கலந்துரையாடலில் செயலாளர் (தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு) பங்கேற்றார்
Posted On:
05 MAR 2025 11:12AM by PIB Chennai
இந்தியாவில் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பை அதிகரிப்பது குறித்த வட்டமேசை கலந்துரையாடல், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலாளர் திருமதி சுமிதா தாவ்ரா தலைமையில், மார்ச் 3, 4-ம் தேதிகளில் முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில் நடைபெற்றது.
இந்தியாவின் பெண் தொழிலாளர் பங்களிப்பு விகிதம் 41.7% ஆக உள்ள நிலையில், வேலைவாய்ப்பு தடைகள், பணியிட பாதுகாப்பு, ஊதிய சமநிலை மற்றும் மின்னணு வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட முக்கிய சவால்கள் மற்றும் தடைகளை நிவர்த்தி செய்ய இந்த வட்ட மேசை மாநாடு தளம் அமைத்துக் கொடுத்தது. அரசு கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள், உலகளாவிய நிறுவனங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களை இம்மாநாடு ஒன்றிணைத்தது. இரண்டு நாள் நடைபெற்ற கலந்துரையாடல்கள் நாட்டின் முழு பணியாளர் திறன், பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சமமான பணியிடங்களை உறுதி செய்யும் கொள்கை சீர்திருத்தங்கள் மற்றும் தொழில்துறை சார்ந்த தீர்வுகளை வடிவமைப்பதில் கவனம் செலுத்தின.
கூட்டத்தில் பேசிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலாளர் திருமதி சுமிதா தாவ்ரா, பயனுள்ள பணியாளர் கொள்கைகளை வடிவமைப்பதில் இந்த வட்டமேசையின் முக்கிய பங்கை வலியுறுத்தினார். இந்தியாவின் பரந்த பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டு இலக்குகளுடன் ஒத்துப்போகும் புதுமையான தீர்வுகளை உருவாக்குவதற்கும், பெண்களுக்கு நிலையான மற்றும் சமமான பணியாளர் பங்களிப்பை உறுதி செய்வதற்கும், தடைகள் மற்றும் கொள்கை இடைவெளிகளை அடையாளம் காண்பது குறித்த விவாதங்கள் மிக முக்கியமானவை என்று அவர் கூறினார். கடந்த ஆறு ஆண்டுகளில் பெண் பணியாளர் பங்களிப்பில் நேர்மறையான போக்கை இந்தியா எவ்வாறு கண்டுள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண் தொழிலாளர் விகிதம் 2017-18-ல் 22.0%-லிருந்து 2023-24-ல் 40.3% ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் பெண் தொழிலாளர் பங்களிப்பு விகிதம் அதே காலகட்டத்தில் 23.3%-லிருந்து 41.7% ஆக அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார். குறிப்பிடத்தக்க வகையில், பெண்களுக்கான வேலையின்மை 5.6%-லிருந்து 3.2% ஆகக் குறைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2108281
***
(Release ID: 2108281)
TS/IR/RR/KR
(Release ID: 2108383)
Visitor Counter : 19