சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஜே.பி.நட்டா ஜஜ்ஜார் எய்ம்ஸ்-ஸில் புற்றுநோய் தொடர்பான மாநாட்டைத் தொடங்கி வைத்தார்


புற்றுநோய்க்கு உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவது, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் பெருமளவு அதிகரித்துள்ளது: திரு ஜே.பி. நட்டா

Posted On: 15 FEB 2025 6:18PM by PIB Chennai

 

மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா ஜஜ்ஜார் எய்ம்ஸ் வளாகத்தில் உள்ள எய்ம்ஸ் தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் 2-வது எய்ம்ஸ் புற்றுநோயியல் மாநாடு 2025-ஐ இன்று (15.02.2025) தொடங்கி வைத்தார். ஜஜ்ஜார் எய்ம்ஸ் வளாகத்தில் உள்ள தேசிய புற்றுநோய் நிறுவனம் (என்சிஐ) இந்தியாவின் மிகப்பெரிய பொது சுகாதார நிறுவனங்களில் ஒன்றாகும். இது புதுமையான புற்றுநோய் பராமரிப்பு, ஆராய்ச்சி திறன்களைக் கொண்டுள்ளது. எய்ம்ஸ் புற்றுநோயியல் மாநாடு, இந்தியாவின் அனைத்து தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களிலும் புற்றுநோயியல் துறையில் உள்ள முன்னணி நிபுணர்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டது. புற்றுநோய் பராமரிப்பு, சிகிச்சை முறைகள், தற்போதைய ஆராய்ச்சி முயற்சிகள் ஆகியவற்றில் முன்னேற்றங்கள் பற்றி இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.

கூட்டத்தில் உரையாற்றிய திரு ஜே.பி. நட்டா, 2019-ம் ஆண்டில் இந்த புற்று நோய் மையம் தொடங்கப்பட்டதிலிருந்து அதன் முன்னேற்றம் குறித்துத் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.  இந்த நிறுவனம் 6 ஆண்டு காலத்தில் உலகத் தரம் வாய்ந்த சுகாதார நிறுவனமாக வளர்ச்சியடைந்துள்ளது என அவர் கூறினார். இந்த முன்னேற்றத்தை ஏற்படுத்தப் பாடுபட்ட மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், ஆகியோருக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

புற்றுநோய் என்பது ஒரு அச்சுறுத்தலான நோய் என்று அவர் கூறினார், இது எதிர்காலம், வாழ்வாதாரம், அன்புக்குரியவர்கள், பொருளாதாரம் என பல இழப்புகளை ஏற்படுத்துகிறது என்று அவர் கூறினார். புற்றுநோய் சிகிச்சை தொடர்பான மத்திய அரசின் முயற்சிகளை எடுத்துரைத்த திரு ஜேபி நட்டா, புற்றுநோயைத் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும், ஒட்டுமொத்த புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்துவதற்கும், ஒவ்வொருவருக்கும், அவர்களின் இருப்பிடத்தைப் பொருட்படுத்தாமல், சிறந்த புற்றுநோய் பராமரிப்பை வழங்க அரசு செயல்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.

ஆயுஷ்மான் ஆரோக்கிய  மையங்கள் மூலம் 26 கோடி பேருக்கு வாய் புற்றுநோய்ப் பரிசோதனையும், 14 கோடி பேருக்கு மார்பக புற்றுநோய் சோதனையும், 9 கோடி பேருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.  2014-15 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில் 19 மாநில புற்றுநோய் நிறுவனங்கள், 20 மூன்றாம் நிலை புற்றுநோய் பராமரிப்பு மையங்களுக்கு 3000 கோடி ரூபாய்க்கு மேல் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். மேலும், அனைத்து 22 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளிலும் நோயறிதல், மருத்துவ, அறுவை சிகிச்சை வசதிகளுடன் புற்றுநோய் சிகிச்சை வசதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மக்கள் ஆரோக்கியத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்த திட்டத்தின் கீழ் புற்றுநோய் தொடர்பான சிகிச்சைக்கு 68.43 லட்சம் மருத்துவமனை சேர்க்கைகள் நடைபெற்றுள்ளதாகவும் ரூ. 13160.75 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இத்திட்டம் காரணமாக சரியான நேரத்தில் புற்றுநோய் சிகிச்சையைத் தொடங்குவது கணிசமாக மேம்பட்டுள்ளது எனவும் புற்றுநோய் சிகிச்சை பெறுவது அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் புற்றுநோய் பாராமரிப்பு மையங்களை  நிறுவ திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். இந்த முயற்சி அத்தியாவசிய புற்றுநோய் சேவைகளை வீட்டிற்கு அருகிலேயே வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஜே.பி. நட்டா தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் புகழ்பெற்ற புற்றுநோயியல் நிபுணர்களின் முக்கிய உரைகள், விவாதங்கள் இடம்பெற்றன. புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் எம். ஸ்ரீனிவாஸ், ஜஜ்ஜாரில் உள்ள தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் அலோக் தாக்கர்,  தேசிய புற்றுநோய் கவுன்சிலின் ஆசிரியர்கள், மருத்துவ வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், நாடு முழுவதும் உள்ள அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனைகளின் சுகாதார கொள்கை வகுப்பாளர்கள், தொழில்முனைவோர், கண்டுபிடிப்பாளர்கள் ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

***

PLM/KV

 

 

 


(Release ID: 2103636) Visitor Counter : 37


Read this release in: English , Urdu , Hindi , Punjabi