சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

முக்கிய கனிமங்கள், சுரங்கத் துறைகளில் இந்தியாவும் இலங்கையும் ஒத்துழைப்பை வலுப்படுத்துகின்றன

Posted On: 15 FEB 2025 2:50PM by PIB Chennai

 

மத்திய நிலக்கரி, சுரங்கத் துறை இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே இலங்கை அரசின் தொழில்- தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு சுனில் ஹந்துன்நெத்தியுடன் புதுதில்லி சாஸ்திரி பவனில் ஆக்கப்பூர்வமான பேச்சுகளை இன்று (15.02.2025) நடத்தினார். கனிம வள ஆய்வு, சுரங்கம் ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வளர்ப்பது, குறிப்பாக இரு நாடுகளின் பொருளாதார, தொழில்துறை வளர்ச்சிக்கு அவசியமான முக்கிய கனிமங்களின் உற்பத்தி, பகிர்வு ஆகியவை குறித்து பேச்சு நடத்தப்பட்டது. பசுமை எரிசக்தி, மேம்பட்ட பேட்டரி தொழில்நுட்பங்கள் போன்றவற்றில் மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ள இலங்கையின் பரந்த கிராபைட், கடற்கரை மணல், கனிம வளங்கள் குறித்தும் பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்டது.

இந்த சந்திப்பின் போது, இலங்கையில் உள்ள இந்திய நிறுவனங்கள் அங்கு கனிம அகழ்வு, சுரங்க வாய்ப்புகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர். லித்தியம், கிராஃபைட், நிக்கல், கோபால்ட், தாமிரம் போன்ற அத்தியாவசிய கனிம மூலப்பொருட்களின் நிலையான விநியோகத்தை உறுதி செய்வது இந்தியாவின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கனிம இயக்கத்தின் நோக்கம் என்று இணையமைச்சர் திரு துபே கூறினார். முக்கியமான கனிமங்களுக்கான சுரங்க உரிமைகளை வழங்குவதற்கும், சர்வதேச ஒத்துழைப்புகளை உருவாக்குவதற்கும், உலக அளவில் கனிம சொத்துக்களை கையகப்படுத்த இந்திய நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கும் இந்தியா தீவிரமாக செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.

இந்தியாவின் சுரங்க அமைச்சகம், இலங்கையின் சுரங்க செயலகம் ஆகியவற்றுக்கு இடையிலான "புவியியல்- கனிய வளங்கள் ஒத்துழைப்பு" தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இறுதி செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டவுடன், திறன் மேம்பாடு, சுரங்க கண்டுபிடிப்பு, மேம்பட்ட கனிம செயலாக்கம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான வலுவான கட்டமைப்பை அது வழங்கும் என்று இணையமைச்சர் திரு துபே நம்பிக்கை தெரிவித்தார்.

***

PLM/KV

 

 


(Release ID: 2103530) Visitor Counter : 27


Read this release in: English , Urdu , Hindi