பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு நரேந்திர மோடி பாரிஸில் செயற்கை நுண்ணறிவு நடவடிக்கை உச்சிமாநாட்டிற்கு இணைத் தலைமை தாங்கினார்
செயற்கை நுண்ணறிவு இந்த நூற்றாண்டின் மனித சமுதாயத்திற்கான குறியீட்டை எழுதுகிறது: பிரதமர்
நமது பகிரப்பட்ட மதிப்புகளை உறுதி செய்யவும், இடர்பாடுகளை எதிர்கொள்ளவும், நம்பிக்கையை கட்டமைப்பதற்குமான நிர்வாகம், தரநிலைகளை அமைக்க உலகளாவிய கூட்டு முயற்சிகள் அவசியம்: பிரதமர்
சுகாதாரம், கல்வி, வேளாண்மை மற்றும் பல்வேறு துறைகளை மேம்படுத்துவதன் மூலம் கோடிக்கணக்கானவர்களின் வாழ்க்கைத் தரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த செயற்கை நுண்ணறிவு உதவும்: பிரதமர்
செயற்கை நுண்ணறிவு சார்ந்த எதிர்காலத்திற்காக நமது மக்களுக்கு திறனை ஏற்படுத்தவும், மறுதிறனூட்டவும் நாம் முதலீடு செய்ய வேண்டும்: பிரதமர்
பொது நன்மைக்காக செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளை நாங்கள் உருவாக்கி வருகிறோம்: பிரதமர்
செயற்கை நுண்ணறிவு எதிர்காலம் சிறப்பானது அனைவருக்குமானது என்பதை உறுதிசெய்ய இந்தியா தனது அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்ளத் தயாராக உள்ளது:பிரதமர்
Posted On:
11 FEB 2025 7:21PM by PIB Chennai
பாரீசில் இன்று செயற்கை நுண்ணறிவு செயல்முறை உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மெக்ரோனுடன் இணைந்து தலைமை தாங்கினார். பிப்ரவரி 6-7 இல் அறிவியல் தினங்களுடன் தொடங்கிய ஒரு வார கால உச்சிமாநாடு, பிப்ரவரி 8-9 அன்று கலாச்சார வார இறுதியுடன், உலகளாவிய தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில் நிபுணர்கள் கலந்து கொண்ட உயர்மட்ட நிலையுடன் நிறைவடைந்தது.
பிப்ரவரி 10 அன்று எலிசி அரண்மனையில் அதிபர் இம்மானுவேல் மெக்ரோன் வழங்கிய இரவு விருந்துடன் உயர்மட்ட நிலையிலான விவாதம் தொடங்கியது. அரசுத் தலைவர்கள், சர்வதேச நிறுவனங்களின் தலைவர்கள், முக்கிய செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் புகழ்பெற்ற பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இன்று நடைபெற்ற முழுமையான அமர்வில், உச்சிமாநாட்டின் இணைத் தலைவராக தொடக்க உரையை ஆற்றுமாறு பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அதிபர் திரு மெக்ரோன் அழைப்பு விடுத்தார். இந்தப் புதிய தொழில்நுட்பங்கள் மனித சமுதாயத்திற்கான குறிமுறையை விரைவாக எழுதி நமது அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் சமூகத்தை மறுவடிவமைக்கூடிய செயற்கை நுண்ணறிவு தருணத்தில் உலக நாடுகள் இருப்பதாகப் பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார். மனித வரலாற்றில் மற்ற தொழில்நுட்ப சாதனைகளிலிருந்து செயற்கை நுண்ணறிவு மிகவும் வித்தியாசமானது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
பகிரப்பட்ட மதிப்புகளை உறுதி செய்து, இடர்ப்பாடுகளை எதிர்கொண்டு நம்பிக்கையை வளர்க்கும் நிர்வகித்தல் மற்றும் தரநிலைகளை நிறுவுவதற்கான உலகளாவிய கூட்டு முயற்சிகள் தேவை என்று அவர் தெரிவித்தார். ஆளுகை என்பது இடர்ப்பாடுகளை எதிர்கொள்வது மட்டுமல்ல, புதுமை கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல் மற்றும் உலகளாவிய நலனுக்காக அதைப் பயன்படுத்துதலும் ஆகும் என்று அவர் மேலும் கூறினார். இது தொடர்பாக, அனைவருக்கும் குறிப்பாக உலகளாவிய தென்பகுதி நாடுகளில் செயற்கை நுண்ணறிவுக்கான அணுகலை உறுதி செய்ய அவர் வலியுறுத்தினார். தொழில்நுட்பத்தைப் பரவலாக்குதல் மற்றும் மக்களை மையப்படுத்தும் பயன்பாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார். இதனால் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவது சாத்தியமாகும் என்றும் அவர் கூறினார். சர்வதேச சூரிய எரிசக்தி கூட்டமைப்பு போன்ற முன்முயற்சிகள் மூலம் இந்தியா-பிரான்ஸ் கூட்டாண்மையின் வெற்றியை சுட்டிக்காட்டிய பிரதமர், புத்திக்கூர்மை மிக்க மற்றும் பொறுப்பான எதிர்காலத்திற்கான புதுமையான கூட்டாண்மையை உருவாக்க இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது அவசியமானது என்று கூறினார்.
வெளிப்படையான, அணுகக்கூடிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அதன் 1.4 பில்லியன் குடிமக்களுக்கு மின்னணு பொது உள்கட்டமைப்பை உருவாக்குவதில் இந்தியாவின் வெற்றியை பிரதமர் எடுத்துரைத்தார். இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு பணியைப் பற்றிப் பேசிய பிரதமர், இந்தியா, அதன் பன்முகத்தன்மையைக் கருத்தில் கொண்டு, செயற்கை நுண்ணறிவுக்காக அதன் சுயமான பேரளவு மொழி மாதிரியை உருவாக்கி வருவதாகக் குறிப்பிட்டார். செயற்கை நுண்ணறிவின் பலன்கள் அனைவரையும் சென்றடைவதை உறுதி செய்வதற்காக இந்தியா தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். அடுத்த செயற்கை நுண்ணறிவு செயல்முறை உச்சிமாநாட்டை இந்தியா நடத்தும் என்று பிரதமர் அறிவித்தார்.
தலைவர்களின் அறிக்கையை ஏற்று உச்சிமாநாடு நிறைவு பெற்றது. உச்சிமாநாட்டில் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பிற்கான மேம்பட்ட அணுகல், பொது நலனுக்காக செயற்கை நுண்ணறிவு, செயற்கை நுண்ணறிவின் பொறுப்பான பயன்பாடு, செயற்கை நுண்ணறிவை மிகவும் மாறுபட்டதாகவும் நிலையானதாகவும் ஆக்குதல் மற்றும் செயற்கை நுண்ணறிவின் பாதுகாப்பான மற்றும் நம்பகமான ஆளுகையை உறுதி செய்தல் உள்ளிட்ட முக்கியமான கருப்பொருள்கள் பற்றிய விவாதங்கள் இடம்பெற்றன.
***
(Release ID: 2101947)
TS/IR/KPG/KR
(Release ID: 2102226)
Visitor Counter : 10
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam