தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
ஸ்பெக்ட்ரம் குறித்த பயிலரங்கத்தை டிராய் தலைவர் தொடங்கி வைத்தார்
Posted On:
21 JAN 2025 11:20AM by PIB Chennai
தெற்காசிய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை கவுன்சிலின் அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) குறித்த பயிலரங்கை டிராய் தலைவர் திரு அனில் குமார் லஹோட்டி இன்று தொடங்கி வைத்தார். இந்த மூன்று நாள் பயிலரங்கில் தெற்காசிய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை கவுன்சிலில் இடம் பெற்றுள்ள உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், பணிக்குழு உறுப்பினர்கள், தொழில்துறை வல்லுநர்கள், பல அரசுத் துறை பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். ஆசியா பசிபிக் தொலைத் தொடர்பு சமுதாயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பயிலரங்கை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை நிறுவனம் (டிராய்) நடத்துகிறது. வேகமாக வளர்ந்து வரும் தொலைத்தொடர்பு பிரிவில் பயனுள்ள அலைக்கற்றை நிர்வாகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதை இந்தப் பயிலரங்கு நோக்கமாகக் கொண்டுள்ளது.
முக்கிய அலைக்கற்றை மேலாண்மை பிரச்சனைகள் குறித்து பங்கேற்பாளர்களிடையே மேம்பட்ட புரிதலை இந்தப் பயிலரங்கு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தெற்காசிய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை கவுன்சிலின் பணிக்குழுவிற்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்களுக்கு வழிவகுக்கும். கூடுதலாக, இந்தப் பயிலரங்கானது உறுப்பு நாடுகள் மற்றும் தொழில்துறை வல்லுநர்களிடையே ஒத்துழைப்பை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் விளைவாக சிறந்த நடைமுறைகள், பயன்பாட்டிற்கான உத்திகள் உருவாக்கப்படும்.
ஆசிய-பசிபிக் தொலைத்தொடர்பு சமூகத்தின் (ஏபிடி) பொதுச் செயலாளர் திரு மசனோரி கோண்டோவின் வரவேற்புரையுடன் தொடக்க அமர்வு தொடங்கியது. இந்தத் தொலைநோக்கை ஆதரிப்பதற்கான ஏபிடி-யின் உறுதிப்பாட்டை இந்த அமர்வு வலியுறுத்தியதுடன், அலைக்கற்றை வளங்களை திறமையாக நிர்வகிப்பதில் பிராந்திய ஒத்துழைப்பின் அவசியத்தையும் வலியுறுத்தியது.
அவரைத் தொடர்ந்து, அலைக்கற்றைத் தொடர்பான தெற்காசிய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை கவுன்சிலின் பணிக்குழு தலைவர் திரு அப்துல் கயூம், கட்டுப்பாட்டாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அலைக்கற்றை பயன்பாட்டை மேம்படுத்த புதுமையான தீர்வுகளின் அவசியம் ஆகியவற்றை எடுத்துரைத்தார்.
தொடக்க உரையில், டிராய் தலைவர் திரு அனில் குமார் லஹோட்டி, இன்றைய டிஜிட்டல் சூழலில், செயல்திறன்மிக்க அலைக்கற்றை நிர்வாகத்தின் முக்கியப் பங்கை வலியுறுத்தினார். தொலைத் தொடர்புத்துறையானது புதுமை மற்றும் அதிகாரமளித்தல், டிஜிட்டல் மாற்றத்தை இயக்குதல், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் தீர்வுகளை வழங்குதல் ஆகியவற்றில் முன்னணியில் உள்ளது என்று அவர் கூறினார்.
டிராய் செயலாளர் திரு அதுல் குமார் சவுத்ரி நன்றியுரையுடன் தொடக்க அமர்வு நிறைவடைந்தது. அதில் கலந்து கொண்ட அனைத்து பிரமுகர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை அவர் தெரிவித்தார். வரவிருக்கும் அமர்வுகளின் போது நடைபெறவுள்ள விவாதங்கள் ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட கற்றல் உணர்வை உருவாக்கும் என்று திரு சவுத்ரி கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2094696
***
TS/PKV/AG/KR
(Release ID: 2094797)
Visitor Counter : 34