மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், டாவோஸில் நடைபெறும் உலக பொருளாதார மன்றம் 2025-ல் பங்கேற்க உள்ளார்

Posted On: 19 JAN 2025 7:52AM by PIB Chennai

 

 டாவோஸில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றக் கூட்டம் 2025-ல் மத்திய ரயில்வே, தகவல் ஒலிபரப்பு, மின்னணு - தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் பங்கேற்க உள்ளார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின்படி, உள்ளடக்கிய வளர்ச்சி, மாற்றத்தை ஏற்படுத்தும் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை அவரது பயணம் எடுத்துக்காட்டுகிறது.

உள்ளடக்கிய வளர்ச்சிக்கான இந்தியாவின் மாதிரி

டாவோஸுக்குப் புறப்படுவதற்கு முன்பு, சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும், குறிப்பாக வரலாற்று ரீதியாக முன்னேற்றத்திலிருந்து விடுபட்ட நாடுகளுக்கு வளர்ச்சியை உறுதி செய்வதில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை திரு வைஷ்ணவ் வலியுறுத்தினார்.

"பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் கவனம் செலுத்தியுள்ளார். இது அடிமட்டத்தில் உள்ளவர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வருகிறது. வங்கிக் கணக்குகள் மூலம் நிதி உள்ளடக்கம் தொடங்கி கழிப்பறைகள், எரிவாயு இணைப்புகள், குழாய் நீர் போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்குதல் வரை சிறப்பாக இந்த அரசு செயல்படுகிறது. கிராமப்புற, நகர்ப்புறங்களில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படுகிறது. இவை அனைத்துமே உலகுக்கு முன்மாதிரியானவை" என்று திரு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

உள்ளடக்கிய வளர்ச்சி, சமூக மேம்பாடு, டிஜிட்டல் உள்கட்டமைப்பில் முதலீடு, தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்துவது போன்றவை குறித்து உலகப் பொருளாதார மன்றத்தில் விரிவான விவாதம் நடைபெறும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

டாவோஸில் உலகப் பொருளாதார மன்றத்தின் கூட்டம், 2025 ஜனவரி 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது.

***

PLM/KV

 


(Release ID: 2094266) Visitor Counter : 21