பாதுகாப்பு அமைச்சகம்
9-வது முன்னாள் படை வீரர்கள் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன - ஜம்முவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பங்கேற்பு
Posted On:
14 JAN 2025 3:38PM by PIB Chennai
ஒன்பதாவது முன்னாள் படை வீரர்கள் தினம் இன்று (2025 ஜனவரி 14) நாடு முழுவதும் பல இடங்களில் கொண்டாடப்பட்டது. ஜம்மு, மும்பை, புது தில்லி, புனே, நாக்பூர், விசாகப்பட்டினம், பெங்களூரு, பரேலி, ஜெய்ப்பூர், சிலிகுரி உள்ளிட்ட பல இடங்களில் முன்னாள் ராணுவ வீரர்களின் தன்னலமற்ற கடமைக்கு மரியாதை செலுத்தும் வகையில் பேரணிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.
ஜம்முவில் உள்ள அக்னூரில் உள்ள தாண்டா பீரங்கிப் படையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 1,000 முன்னாள் ராணுவ வீரர்கள் மத்தியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் உரையாற்றினார். முன்னாள் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர், எல்லைகளை பாதுகாப்பதில் தன்னலமற்ற சேவை, ஓய்வு பெற்ற, பணியில் உள்ள ஆயுதப்படை வீரர்களின் ஈடு இணையற்ற துணிச்சல், அர்ப்பணிப்பு, தியாகம், தேசபக்தி ஆகியவற்றுக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.
நமது நாடு என்றென்றும் ஆயுதப் படைகளுக்கு கடன்பட்டிருக்கும் என்று கூறிய பாதுகாப்புத் துறை அமைச்சர், துணிச்சலான வீரர்கள் மீது ஒவ்வொரு இந்தியரும் ஆழ்ந்த மரியாதை வைத்திருப்பதாகவும் கூறினார். படைவீரர்கள் மீதான இந்த மரியாதை நாட்டின் விழுமியங்களில் பதிந்துள்ளது என்று கூறிய அவர், படைவீரர் தின நிகழ்வுகளை நடத்துவது அந்த மரியாதையைக் காட்டுவதற்கான ஒரு வழியாகும் என்று சுட்டிக்காட்டினார்.
ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது, இருக்கிறது, எப்போதும் இருக்கும் என்பதற்கு அக்னூரில் நடைபெறும் படைவீரர் தின கொண்டாட்டங்கள் ஒரு சான்று என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார். ஜம்மு-காஷ்மீருக்கும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கால் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் அசைக்க முடியாத உறுதியை மீண்டும் வலியுறுத்திய அவர், 370- வது பிரிவை ரத்து செய்தது இந்த திசையில் ஒரு முக்கியமான நடவடிக்கை என்று விவரித்தார்.
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக திரு ராஜ்நாத் சிங் 108 அடி உயர தேசியக் கொடியை ஏற்றி, 'அக்னூர் பாரம்பரிய அருங்காட்சியகத்தை' திறந்து வைத்தார். இந்த அருங்காட்சியகம் இப்பகுதியின் வளமான வரலாறு, கலாச்சாரத்திற்கு மரியாதை செலுத்துகிறது.
ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, ஜம்மு காஷ்மீர் முதல்வர் திரு உமர் அப்துல்லா; முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சௌகான், பல்வேறு முன்னாள் ராணுவ வீரர்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மும்பையில் உள்ள கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் உள்ள கவுரவ் ஸ்தம்பில் (கடல் நினைவுச் சின்னம்) பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து, இந்திய கடற்படை மாலுமிகள் நிறுவனத்தில் (ஐஎன்எஸ்ஐ சாகர்) முப்படைகளின் முன்னாள் வீரர்கள் பேரணி நடைபெற்றது. இதில் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் முன்னாள் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். இந்த பேரணியில் சுமார் 400 முன்னாள் வீரர்கள் கலந்து கொண்டனர். திரு. சஞ்சய் சேத் தமது உரையில், முன்னாள் வீரர்களின் நேர்மை, மதிப்புகள், ஒழுக்கம் ஆகியவற்றிற்காக அவர்களைப் பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி கலந்து கொண்டார்.
புனேவில் நடைபெற்ற ஆயுதப்படை வீரர்கள் தின நிகழ்ச்சிக்கு ராணுவ தலைமை தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி தலைமை வகித்தார்.
1953 ஆம் ஆண்டில் இதே நாளில் ஓய்வு பெற்ற ஆயுதப்படைகளின் முதல் தளபதி ஃபீல்ட் மார்ஷல் கே.எம்.கரியப்பா ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும் வகையில் 2016ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14-ம் தேதி முன்னாள் படை வீரர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
***
PLM/DL
(Release ID: 2092849)
Visitor Counter : 21