வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
அனுமதியற்ற வர்த்தகத்தைத் தடுப்பது தொடர்பான வர்த்தகப் போக்குவரத்து ஒத்துழைப்புக்கான இந்தியா-நேபாள அரசுகளுக்கு இடையிலான குழுவின் கூட்டம் காத்மாண்டுவில் நிறைவடைந்தது
Posted On:
12 JAN 2025 6:56PM by PIB Chennai
அங்கீகரிக்கப்படாத வர்த்தகத்தைத் தடுப்பதற்கான வர்த்தகம், போக்குவரத்து ஒத்துழைப்புக்கான இந்தியா-நேபாள அரசுகளுக்கு இடையிலான குழுக் (IGC) கூட்டம், 2025 ஜனவரி 10, 11 தேதிகளில் காத்மாண்டுவில் நடைபெற்றது.
மத்திய அரசின் வர்த்தகத் துறை செயலாளர் திரு சுனில் பர்த்வால் தலைமையில் காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம், பல்வேறு அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் அடங்கிய இந்தியக் குழுவினர் இதில் பங்கேற்றனர். நேபாள தரப்பில் நேபாள அரசின் தொழில், வர்த்தக அமைச்சகத்தின் செயலாளர் திரு கோபிந்த பகதூர் கார்க்கி தலைமையில் பல்வேறு நேபாள அமைச்சகங்கள், துறைகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
வர்த்தக முதலீட்டு உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இருதரப்பு செயல்முறையான ஐஜிசி-யின் இந்தக் கூட்டம், இருதரப்பு வர்த்தகம், பொருளாதார உறவுகளின் முழு வரம்பையும் விரிவான மதிப்பாய்வு செய்தது. பரஸ்பர சந்தை அணுகல் பிரச்சினைகள், அறிவுசார் சொத்துரிமை, கடமை தொடர்பான பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் ஆய்வு செய்தனர். போக்குவரத்து ஒப்பந்தம், வர்த்தக ஒப்பந்தம் ஆகியவற்றை மறுஆய்வு செய்தல், தற்போதுள்ள ஒப்பந்தங்களில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள், ரக்சவுல்-பிர்குஞ்ச் ரயில் பாதையின் மின்மயமாக்கல் உட்பட வர்த்தக உள்கட்டமைப்பின் வளர்ச்சி குறித்த விவாதங்களும் இடம்பெற்றன.
இந்த சந்திப்பின் போது, 200,000 மெட்ரிக் டன் கோதுமையை வழங்குவதற்கான நேபாளத்தின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இந்திய தரப்பு தெரிவித்தது. நேபாளத்திற்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதில் இந்தியா தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதற்கு நேபாள தரப்பு தனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தது.
நேபாளத்தின் மிகப்பெரிய வர்த்தக, முதலீட்டு ஒத்துழைப்பு நாடாக இந்தியா தொடர்கிறது. இந்த விவாதங்கள் இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார, வர்த்தக தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
***
PLM/DL
(Release ID: 2092294)
Visitor Counter : 19