பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
பெண்கள், குழந்தைகளுக்கான மேம்பாட்டு முயற்சிகளை வலுப்படுத்தும் வகையில் சிந்தனை முகாம்: மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி பங்கேற்பு
Posted On:
12 JAN 2025 6:22PM by PIB Chennai
மத்திய அரசின் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ராஜஸ்தானின் உதய்பூரில் 2025 ஜனவரி 10 முதல் 12 தேதி வரை சிந்தனை முகாம் நிகழ்ச்சியை வெற்றிகரமாக ஏற்பாடு செய்தது. பெண்கள், குழந்தைகள் நலன், மேம்பாடு தொடர்பான முக்கியமான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க, 32 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளை இந்த நிகழ்வு ஒன்றிணைத்தது.
ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன் லால் சர்மா, மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவியுடன் இணைந்து சிந்தனை முகாம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் இதில் பங்கேற்றனர்.
சிந்தனை முகாமின் போது, மத்திய மகளிர் மேம்பாட்டு அமைச்சகத்தின் முதன்மைத் திட்டங்களான சாக்ஷம் அங்கன்வாடி இயக்கம், ஊட்டச்சத்து இயக்கம் போன்றவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. புதுமையான கருத்துக்கள், பகிரப்பட்ட அனுபவங்கள், கொள்கை மேம்பாடுகளுக்கான வழிகள், இந்த இயக்கங்களை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக மாநிலங்களிடையே சிறந்த நடைமுறைகளை பரப்புதல் ஆகியவற்றிற்கான ஒரு தளத்தை இந்த நிகழ்வு வழங்கியது.
நிகழ்வின் முக்கியமாக, இந்தியாவின் வளமான பாரம்பரியம், பன்முகத்தன்மையைக் கொண்டாடும் வகையில் ஒரு கலாச்சார நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாரம்பரிய ராஜஸ்தானி நாட்டுப்புற நடனங்கள், இசை நிகழ்ச்சிகள் நாடக விளக்கக்காட்சிகள் இடம்பெற்றன.
நிகழ்ச்சியில் மத்திய பெண்கள் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி உரையாற்றினார். ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிக்கவும், குழந்தைகள் நலனை மேம்படுத்தவும் நாம் ஒன்றிணைய வேண்டும் என்றார். அப்போது நிலையான வளர்ச்சியைத் தாண்டி, பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் மூலம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை அடைய முடியும் என்று அவர் கூறினார்.
சிந்தனை முகாம் இன்று (2025 ஜனவரி 12) நிறைவடைந்தது. நிகழ்ச்சியின் நிறைவுரையாக, பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் பேசுகையில், பல்வேறு மாநிலங்களால் பகிரப்பட்ட ஊக்கமளிக்கும் சிறந்த நடைமுறைகள், அவற்றின் வெற்றிக் கதைகள் மற்ற பகுகளுக்கு வழிகாட்டிகளாக செயல்பட முடியும் என்றார்.
***
PLM/DL
(Release ID: 2092293)
Visitor Counter : 40