பாதுகாப்பு அமைச்சகம்
குடியரசு தின தேசிய மாணவர் படை முகாம் 2025-ல் பங்கேற்கும் 2,361 பேரில் சாதனை அளவாக 917 மாணவிகள் இடம் பெற்றுள்ளனர்
Posted On:
03 JAN 2025 3:58PM by PIB Chennai
2025 குடியரசு தின முகாமில் தேசிய மாணவர் படையின் (என்.சி.சி) 917 பெண்கள் உட்பட 2,361 மாணவர்கள் பங்கேற்பார்கள் – பெண்கள் பங்கேற்பு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச எண்ணிக்கையாகும். தில்லி கண்டோன்மென்டில் ஜனவரி 03, 2025 அன்று செய்தியாளர்களிடம் பேசிய தேசிய மாணவர் படை தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்பிர்பால் சிங், ஒரு மாத கால முகாமில் நாடு முழுவதிலுமிருந்து என் சி சிமாணவர்கள் பங்கேற்பார்கள். இதில் ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக்கைச் சேர்ந்த 114 பேரும் வடகிழக்கு பிராந்தியத்திலிருந்து 178 பேரும் அடங்குவர் . இளைஞர் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் 18 நட்பு நாடுகளைச் சேர்ந்த சுமார் 135 மாணவர்களும் இந்த முகாமில் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறினார்.
முகாமின் போது, இவர்கள் கலாச்சார மற்றும் பயிற்சி போட்டிகள் போன்ற பல நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். இந்தியாவின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை வெளிப்படுத்துவதும், மாணவர்களின் தனிப்பட்ட பண்புகளை மேம்படுத்துவதும், அவர்களின் மாண்பை வலுப்படுத்துவதும் முகாமின் நோக்கமாகும். இந்த முகாமில் குடியரசு துணைத் தலைவர், பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்புத் துறை இணையமைச்சர், தில்லி பிரதேச முதலமைச்சர், முப்படைகளின் தலைவர், முப்படை தளபதிகள், பாதுகாப்புத் துறை செயலாளர் உள்ளிட்ட ஏராளமான பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். ஜனவரி 26 அன்று கடமைப் பாதையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தேசிய மாணவர் படையினரும் பங்கேற்பார்கள் . இந்த நடவடிக்கைகள் 2025 ஜனவரி 27 அன்று பிரதமரின் பேரணியுடன் நிறைவடையும்.
2024-ம் ஆண்டில் என்.சி.சியின் முக்கிய சாதனைகளை தேசிய மாணவர் படை தலைமை இயக்குநர் எடுத்துரைத்தார். உலகின் மிகப்பெரிய சீருடை இளைஞர் அமைப்பின் 76 ஆண்டுகால சேவையை அவர் பாராட்டினார். என்.சி.சி மாணவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் 40% பெண்கள் என்று அவர் தெரிவித்தார் . பல்வேறு பிராந்தியங்கள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த மாணவர்களிடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கும் பிணைப்பை வலுப்படுத்துவதற்கும் வழக்கமான 1,162 வருடாந்தர பயிற்சி முகாம்கள் தவிர , ஆறு சிறப்பு தேசிய ஒருமைப்பாட்டு முகாம்கள், 33 ஒரே இந்தியா உன்னத இந்தியா முகாம்கள், நடத்தப்பட்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார். வழக்கமான சாகச நடவடிக்கைகளுக்கு அப்பால் என்.சி.சி பின்வரும் செயல்பாடுகளில் ஈடுபட்டது.
• மவுண்ட் காங் யாட்சே (லடாக்), மவுண்ட் அபி காமின் (உத்தராகண்ட்) ஆகிய இடங்களில் சிறப்பு மலையேறும் பயணங்கள்.
• கங்கை, ஹூக்ளியில் 550 மாணவர்கள் மேற்கொண்ட 1,720 கிலோ மீட்டர் தூர முதலாவது சிறப்பு பாய்மரப் படகுப் பயணம்.
• மும்பையில் இருந்து விசாகப்பட்டினம் வரை கடற்கரையோரமாக 3,045 கி.மீ. பயணம்.
• வரலாற்றை மீண்டும் நினைவுகூரும் வகையில், 40 மாணவர்கள் 410 கி.மீ தூர தண்டி யாத்திரையை 14 நாட்களில் நிறைவு செய்தனர். 2024 டிசம்பர் 10 முதல் 23 வரை நடத்தப்பட்ட இந்த யாத்திரை குஜராத்தின் தண்டியில் உள்ள தேசிய உப்பு சத்தியாகிரக நினைவகத்தில் முடிவடைந்தது.
• மீரட்டிலிருந்து புதுதில்லிக்கு சைக்ளத்தான். 2024 டிசம்பர் 30, அன்று தொடங்கிய இந்தப் பயணம் பரேலி, லக்னோ, வாரணாசி, ஜான்சி & ஆக்ரா வழியாக 1,900 கி.மீ. தூரத்திற்கு நடைபெற்றது.
• ஹுசியானிவாலாவிலிருந்து புதுதில்லிக்கு சைக்ளத்தான். இது கேம்கரன், அமிர்தசரஸ், பானிபட் வழியாக 704 கி.மீ. தூரத்திற்கு நடைபெற்றது.
• என்.சி.சி அமைப்பு தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்து, உயிர்களை காப்பாற்றும் நோக்கில் 40,000 யூனிட் ரத்ததானம் செய்யப்பட்டது.
அரசின் பல்வேறு முன்முயற்சிகள்/திட்டங்களில் தேசிய மாணவர் படை மாணவர்களின் பங்களிப்பையும் என்சிசி தலைமை இயக்குநர் எடுத்துரைத்தார். 'தாயின் பெயரில் ஒரு மரக்கன்று' திட்டத்தின் ஒரு பகுதியாக ஒன்பது லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டன. சர்வதேச யோகா தினத்தில் எட்டு லட்சத்திற்கும் அதிகமான தேசிய மாணவர் படை வீரர்கள் பங்கு பெற்றனர். தூய்மையை மேம்படுத்தும் வகையில் நான்கு லட்சத்துக்கும் அதிகமான தேசிய மாணவர் படை வீரர்கள் தூய்மை இயக்கத்தில் ஈடுபட்டனர். இந்த ஆண்டு, இணைய விழிப்புணர்வு, பேரிடர் மேலாண்மை போன்ற சமகால பாடங்களில் மாணவர்களுக்கு பயிற்சிக்காக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், இந்திய அணுமின் கழகம் போன்ற நிறுவனங்களுக்கான பயணங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
***
TS/SMB/RR/DL
(Release ID: 2089930)
Visitor Counter : 33