கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடல்சார் பாரம்பரியத்திற்கான உலகளாவிய மையமாக லோத்தல் மாறும்: மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால்

Posted On: 28 DEC 2024 5:40PM by PIB Chennai

 

  மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் ஆகியோர் லோதலில் உள்ள தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தின் (NMHC) முன்னேற்றத்தை மதிப்பீடு செய்து ஆய்வு செய்தனர்.

சாகர்மாலா திட்டத்தின் கீழ், துறைமுகங்கள், கப்பல், நீர்வழிகள் அமைச்சகம், தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தை உருவாக்கி வருகிறது. இது இந்தியாவின் கடல்சார் பாரம்பரியத்தை பழைய காலம் முதல் நவீன காலம் வரை வெளிப்படுத்தும். விழிப்புணர்வை பரப்புவதற்கும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கும் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதுமையான "கல்வி பொழுதுபோக்கு" அணுகுமுறை இதில் பின்பற்றப்படும்.

கிமு 2400-க்கு முந்தைய பண்டைய சிந்து சமவெளி நாகரிகத்தின் முக்கிய நகரமான லோத்தல், அதன் மேம்பட்ட கப்பல்துறை, செழிப்பான வர்த்தகம்,  புகழ்பெற்ற மணி தயாரிக்கும் தொழில் ஆகியவற்றிற்காக வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட முத்திரைகள், கருவிகள், மட்பாண்டங்கள் போன்ற கலைப்பொருட்கள் ஒரு வளமான கலாச்சார, பொருளாதார வரலாற்றை வெளிப்படுத்துகின்றன. இது ஹரப்பா நாகரிகத்தின் முக்கிய தளமாக அமைந்துள்ளது.

ஐஎன்எஸ் நிஷாங்க், லோத்தல் படகுத்துறை நடைபாதை, அருங்காட்சியகத் தொகுதி உள்ளிட்ட முக்கிய திட்டப் பணிகளை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.  உள்கட்டமைப்பு மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க மைல்கற்களை எட்டியிருப்பது குறித்து திருப்தி தெரிவித்த மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், இத்திட்டம் திட்டமிட்டபடி முன்னேறி வருவதாகக் குறிப்பிட்டார்.

இந்த திட்டத்தின் சமூக-பொருளாதார தாக்கத்தை எடுத்துரைத்த திரு சர்பானந்தா சோனோவால் , இந்த திட்டம் வேலைவாய்ப்பை உருவாக்கி, திறன் மேம்பாட்டை வளர்த்து குஜராத்தின் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் என்றார்.

இந்த திட்டம் சுற்றுலாவை மேம்படுத்தி, கடல்சார் கல்விக்கான தளத்தை வழங்கும் எனவும் இந்தியாவின் கடல்சார் சமூகத்திற்கும் உலகளாவிய கடல்சார் தொழில்துறைக்கும் இடையே அதிக ஒத்துழைப்பை வளர்க்கும் என்றும் அவர் கூறினார். இந்தியாவை ஒரு முன்னணி கடல்சார் தேசமாக மாற்றுவதற்கான பார்வையை நனவாக்குவதற்கான ஒரு முக்கியமான படியாக இது அமையும் என்று மத்திய அமைச்சர் மேலும் கூறினார்.

***

PLM/KV

 


(Release ID: 2088609) Visitor Counter : 42